தேடுதல்

ஈராக்கின் மோசூல் நகர் Hosh al-Bieaa வளாகத்தில் ஈராக்கின் மோசூல் நகர் Hosh al-Bieaa வளாகத்தில் 

போர்களால் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை இறைவேண்டல்

அன்பின் கடவுளாக இறைவன் இருக்கும்போது, அவர் பெயரால் நம் சகோதரர், சகோதரிகளோடு பகைமை பாராட்டுவது தவறு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

போரால் தங்கள் வாழ்வு பறிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கின் மோசூல் நகர் Hosh al-Bieaa மையத்தில் நடந்த செப வழிபாட்டில் இறைவனை நோக்கி எழுப்பிய இறைவேண்டலின் சுருக்கம்:

ஈராக்கிலும், மத்தியக்கிழக்கு நாடுகள் அனைத்திலும், போரில் பலியான அனைவருக்காகவும், இந்த மோசூல் நகரில் ஒன்றிணைந்து இறைவேண்டல்களை மேற்கொள்வதற்கு முன்னர், சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

வாழ்வின் கடவுளாக இறைவன் இருக்கிறார் என்பது உண்மையெனில், அவர் பெயரால், நம் சகோதரர்களை, சகோதரிகளை, கொல்வது தவறு.

அமைதியின் கடவுளாக இறைவன் இருக்கும் நிலையில், அவர் பெயரால், போர்களை நடத்துவது தவறு.

அன்பின் கடவுளாக இறைவன் இருக்கும்போது, அவர் பெயரால், நம் சகோதரர், சகோதரிகளோடு பகைமை பாராட்டுவது தவறு.

போரால் பலியான அனைவருக்காகவும் இப்போது இறைவேண்டலில் இணைவோம். முடிவற்ற வாழ்வையும், நீடித்த அமைதியையும் இவர்களுக்கு வழங்கும் எல்லா வல்ல இறைவன், தன் தந்தைக்குரிய அரவணைப்பில் இவர்களை வரவேற்பாராக. நமக்காகவும் நாம் இறைவேண்டல் செய்வோம். நம் மத பாரம்பரியங்கள் வெவ்வேறாக இருப்பினும், கடவுளின் பார்வையில நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு, இணக்க வாழ்விலும், அமைதியிலும் தொடர்ந்து வாழ்வோம்.

இறைவேண்டல்:

அனைத்திற்கும் மேலான இறைவா, அனைத்துக் காலங்களின் ஆண்டவரே, அன்பினால் இவ்வுலகை படைத்தீர். உம் படைப்புகள்மீது உம் ஆசீரை தொடர்ந்து பொழிவதை ஒருபோதும் நீர் நிறுத்தியதில்லை. மரணம், துயரம் எனும் பெருங்கடலைத் தாண்டியும், வன்முறை, அநீதி, நியாயமற்ற இலாப ஈட்டல் போன்றவைகளுக்கான மனிதனின் சோதனைகளைத் தாண்டியும், உம் புதல்வர், புதல்வியரை, தந்தைக்குரிய பரிவன்பினால் உடனிருந்து வழி நடத்துகிறீர். ஆனால் நாங்களோ, உம் கொடைகளை ஏற்க மறுத்து, உலக பொருட்கள் மீதான ஆசையால் கவரப்பட்டு, நீர் எமக்கு அமைதி மற்றும் இணைக்க வாழ்வு குறித்து வழங்கியுள்ள ஆலோசனைகளை ஒதுக்கித் தள்ளியுள்ளோம்.

நாங்கள் எங்களைப்பற்றியும், எங்கள் சுயநல எண்ணங்கள் குறித்தும் அதிகக் கவலைப்பட்டுள்ளோம். உம்மிடமும், மற்றவர்களுடனும், அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு, அமைதிக்கு கதவுகளை சாத்தியுள்ளோம்.

அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன (யோனா  1:2), என இறைவாக்கினர் யோனாவுக்கு நினிவே குறித்து உரைக்கப்பட்ட வார்த்தைகள் மீண்டும் ஒலித்தன. நாம் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யவில்லை (1 திமோ 2:8), ஆனால், மீண்டுமொருமுறை, அப்பாவிகளின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து விண்ணை நோக்கிக் கதறியது (தொ.நூ 4:10). நினிவே நகர மக்கள் உங்கள் இறைவாக்கினரின் குரலுக்கு செவிமடுத்து, பரிகாரங்கள் வழியாக மீட்பைக் கண்டுகொண்டதை யோனா நூலில் காண்கிறோம். 

மனிதர் மீது மனிதர் கொண்ட பகைமையுணர்வால் பலியான மக்களை இன்று உம்மிடம் ஒப்படைக்கிறோம், இறைவா. உம் மன்னிப்பை வேண்டி, பாவங்களுக்காக மனம் வருந்துவதற்குரிய அருளை இறைஞ்சுகின்றோம். ஆண்டவரே இரக்கமாயிரும், ஆண்டவரே இரக்கமாயிரும், ஆண்டவரே இரக்கமாயிரும் (Kyrie eleison!  Kyrie eleison!  Kyrie eleison!) .

                                               (சிறிது நேர மௌனம்)

இறைவா, உம்மோடு எப்போதும் நெருக்கத்தில் இருப்பதற்குரிய மனிதனின் நிலையான ஆவலின் இரு அடையாளங்களை இந்நகரில் காணமுடிகிறது. Al-Hadba மெல்லிய உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட Al-Nouri மசூதி, மற்றும், குறுகியதும் விலைமதிப்பற்றதுமான நேரத்தை, மக்களுக்கு நூறாண்டுகளுக்கு மேலாக காட்டிக்கொண்டேயிருக்கும், காலத்தின் அன்னை மரியா கோவில் (Our Lady of the Hour) ஆகியவையே அவை.

அன்பு, அமைதி, ஒப்புரவு ஆகியவை குறித்த உமது திட்டங்களை, எம் குறுகிய கால வாழ்வின்போது செயல்படுத்த, நீர் எம்மிடம் ஒப்படைத்த பணியை யாம் உணர்ந்திட இறைவா, எமக்கு கற்றுத்தாரும். இதனை நாங்கள் உணர்ந்து, உடனடியாகச் செயல்படுத்துவதன் வழியாகவே, இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், உடைந்த உள்ளங்களைக் குணப்படுத்தவும் முடியும்.

தனிமனிதர்களாகவோ, குழுக்களாகவோ எங்களின் சுயநலன்களுக்காக பணியாற்றாமல், உம் அன்பின் திட்டத்திற்காக செயலாற்றுமாறு எமக்கு உதவியருளும். நாங்கள் வழிமாறிச் செல்லும்போது, நல்மனதுடைய மக்களின் குரலுக்கு செவிமடுத்து, அழிவு மற்றும் மரணத்திலிருந்து எம்மைக் காப்பாற்ற எமக்கு அருள்தாரும்.

தங்கள் சகோதர சகோதரிகளின் வன்முறைகளாலேயே, தங்கள் இவ்வுலக வாழ்நாளின் காலத்தை விரைவில் முடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களை, உம் கைகளில் ஒப்படைக்கிறோம் இறைவா. இத்தகைய ஒரு நிலைக்கு காரணமானவர்களுக்காகவும் இறைவேண்டல் செய்கிறோம். உம் கருணையின் சக்தியால் இவர்கள் தொடப்பட்டு, மனம் வருந்தி திருந்துவார்களாக.

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு வழங்கியருளும் இறைவா. முடிவற்ற ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக. அவர்கள் அமைதியில் இளைப்பாறுவார்களாக. ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2021, 15:15