தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்திலிருந்து நேரடி ஒளிபரப்பில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்திலிருந்து நேரடி ஒளிபரப்பில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை  

நேரடி ஒளிபரப்பில், திருத்தந்தையின் திருப்பலி – முதல் ஆண்டு

2020ம் ஆண்டு, மார்ச் 9, திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு இசைவு தெரிவித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய பரவல் காரணமாக, இத்தாலியின் ஆலயங்களில், மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் ஊடகத்தின் வழியே நேரடி ஒளிபரப்பில் திருப்பலிகளைத் துவக்கிய நாளின், ஓராண்டு நிறைவு, மார்ச் 9, இச்செவ்வாயன்று இடம்பெற்றது.

2020ம் ஆண்டு, மார்ச் 9, திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு இசைவு தெரிவித்தார்.

திருத்தந்தை ஆற்றிய இத்திருப்பலி, பல்வேறு தொலைகாட்சி நிறுவனங்களால் உலகெங்கும் நேரடியாக கொண்டுசெல்லப்பட்டது என்பதும், உலகின் பல நாடுகளில், மக்கள், தங்கள் இல்லங்களில் உள்ள தொலைக்காட்சி மற்றும், கைப்பேசி வழியே திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில் பங்கெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்திருப்பலியின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றையத் திருப்பலியை, மருத்துவப் பணியாளர்கள், நோயுற்றோர், குறிப்பாக, கோவிட் கிருமியால் பாதிக்கப்பட்ட முதியோர், பள்ளிகளுக்குச் செல்ல இயலாத சிறுவர், சிறுமியர், கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகள் என்று,  ஒவ்வொருநாளும், ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக நிறைவேற்றி வந்தார்.

santa marta
santa marta

2020ம் ஆண்டு மே மாதம், கோவிட் பெருந்தொற்றின் வீரியம் குறைந்ததையடுத்து, இத்தாலியில் ஆலயங்களில் திருப்பலிகள் தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, திருத்தந்தை நிறைவேற்றி வந்த திருப்பலிகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

2020ம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதத்திற்கு இடைப்பட்ட நாள்களில், மார்ச் 27ம் தேதி, வெள்ளிக்கிழமை, ஆள் நடமாட்டம் முற்றிலும் இல்லாத புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கும்படி, 'Urbi et Orbi' சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டு, ஆசீரை வழங்கினார்.

அதேவண்ணம், 2020ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி துவங்கிய புனித வார நிகழ்வுகள் அனைத்தையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகக் குறைந்த அளவு மக்களின் பங்கேற்புடன் புனித பேதுரு பெருங்கோவிலிலும், வளாகத்திலும் நிறைவேற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேரடி ஒளிபரப்பின வழியே, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலிகள், மற்றும் புனித வார திரு நிகழ்வுகள் அனைத்தையும், உலகெங்கிலும் மக்கள் கண்டு பயனடைந்தனர்.

10 March 2021, 14:15