தேடுதல்

Vatican News
பானமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் பானமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை: உலகமனைத்திற்கும் நற்செய்தியின் மகிழ்வாக..

கோவிட் 19 பெருந்தொற்று பரவிய 2020ம் ஆண்டில், மக்களோடு செபத்தால் ஒன்றித்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டில், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற, ஈராக் திருத்தூதுப் பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 13, இச்சனிக்கிழமையன்று, தன் தலைமைப்பணியில் எட்டு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, கத்தோலிக்க பெண்கள் அமைப்பு உட்பட, உலகின் பல்வேறு அமைப்புகள், மற்றும், தலைவர்கள், தங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன் எட்டு ஆண்டுகள் தலைமைப்பணியை நிறைவுசெய்துள்ளதை முன்னிட்டு, அவரது இந்த தலைமைப்பணி பற்றிய, தன் கருத்துக்களைப் விரிவாகப் பதிவுசெய்துள்ளது, வத்திக்கான் செய்தித்துறை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எட்டு ஆண்டுகள் தலைமைப்பணி, மனித சமுதாயம் முழுவதற்கும், இயேசுவின் அன்பை எடுத்துச்செல்லும் இலக்கோடு, அனைத்து கிறிஸ்தவர்களும், புதியதொரு மறைப்பணி ஆர்வத்தில் ஈடுபடத் தூண்டியுள்ளது என்று வத்திக்கானின் செய்தித்துறை கூறியுள்ளது.   

மக்களுக்கு மிக நெருக்கமாக இருத்தல், திருஅவையில் கூட்டுப்பண்பு, மறைப்பணியில் உந்துவிசை ஆகிய மூன்றையும், தன் எட்டு ஆண்டுகள் தலைமைப்பணியில் மூலைக்கற்களாக அமைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் உண்மையான மகிழ்வை, புதியதோர் உயிர்த்துடிப்புடன், வாழ்வில் வெளிப்படுத்துமாறும் விசுவாசிகள் அனைவரையும் தூண்டிவருகிறார்.

திறந்த கதவுகளோடு, தெருக்களுக்குச் செல்லுகின்ற, பரிவன்பு அல்லது, இரக்கத்தில் புரட்சியை ஏற்படுத்த அஞ்சாமல் இருக்கின்ற திருஅவையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பும் திருஅவை என்று, வத்திக்கான் செய்தித் துறை கூறியுள்ளது.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில்

புதியனவற்றைப் புகுத்திவரும் திருத்தந்தை

தன் தலைமைப்பணிக்கு, புதியனபுகுத்தல் மற்றும், நற்செய்தியின் மகிழ்வை, வழிகாட்டிகளாகக் கொண்டிருக்கும் திருத்தந்தை, பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றது,  இயேசு சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்காவிலிருந்தும், நவீன காலத்தில், திருத்தந்தை ஒருவர், தன் தலைமைப்பணியைத் துறந்ததையடுத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை போன்ற புதினங்களைக் கொண்டிருக்கிறார்.

வத்திக்கானில் வழக்கமாக திருத்தந்தையர் தங்கும் இடத்தில் தங்காமல், சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்குவதற்குத் தீர்மானித்தது, அந்த இல்லத்தில் ஒவ்வொரு நாள் காலையில் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவது, அத்திருப்பலிகளில் ஒரு பங்குத்தந்தைபோன்று மறையுரையாற்றுவது, விசுவாசிகளோடு நேரடி உரையாடலை உருவாக்கி, இறைவார்த்தையை வாழ்வாக்குமாறு தூண்டிவருவது உட்பட,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணியில் பல்வேறு புதினங்களைப் புகுத்தியுள்ளார்.

2013ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, “நற்செய்தியின் மகிழ்வு” (Evangelii gaudium), திருத்தூது அறிவுரை மடல், அவரது  புதிய தலைமைப் பணிக்கு வழிகாட்டும் கொள்கை விளக்கமாக இருந்தது என்றும், அது, மகிழ்வால் வெளிப்படும் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும், திருஅவையின் அமைப்புமுறையில் சீர்திருத்தம் இடம்பெறுவதற்கும் அவர் அழைப்பு விடுத்து வருவதற்கும் உதவியாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

குடும்பம்

2014ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மேய்ப்புப்பணியில் குடும்பத்தை மையப்படுத்தி செயல்பட்டார் என்றும், அவ்வாண்டில், குடும்பம் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தைக் கூட்டினார் என்றும், 2016ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அவர் வெளியிட்ட “அன்பின் மகிழ்வு”  (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடலில், திருமணம், குடும்பம், ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் சிறார் பாதுகாப்பு பற்றிய திருப்பீட அவை ஒன்றையும் திருத்தந்தை உருவாக்கினார்.

படைப்பைப் பாதுகாத்தல்

2015ம் ஆண்டில் படைப்பைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்த திருத்தந்தை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது குறித்த “இறைவா உமக்கே புகழ்” (Laudato si’)  என்ற திருமடலை வெளியிட்டார். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் நாள், படைப்பைப் பாதுகாக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுமாறும் திருத்தந்தை அறிவித்தார்.

வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

2016ம் ஆண்டை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக அறிவித்து சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி கியூபாவில், மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களைச் சந்தித்தார். அச்சமயத்தில், இவர்கள் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.

திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும்தந்தை கிரில்
திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும்தந்தை கிரில்

வறியோர் உலக நாள்

2017ம் ஆண்டில் வறியோர் உலக நாளை உருவாக்கிய திருத்தந்தை, அதே ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, நியுயார்க் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் உரையாற்றினார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை நடைமுறைப்படுத்திய நாடுகளில், வத்திக்கானும் ஒன்றாக விளங்கச் செய்தார்.

2018ம் ஆண்டில் இளையோரை மையப்படுத்திய உலக ஆயர்கள் மாமன்றத்தைக் கூட்டினார், 2019ம் ஆண்டில் “கிறிஸ்து வாழ்கிறார்” (Christus vivit) என்ற திருத்தூது அறிவுரை மடலில் கையெழுத்திட்டார். மேலும், இவ்வாண்டில் வத்திக்கான் மற்றும், திருப்பீடத்தின் பொருளாதார, மற்றும், நிதி அமைப்புக்களில் சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார்.

பெருந்தொற்று காலத்தில் இறைவேண்டல்

கோவிட் 19 பெருந்தொற்று பரவிய 2020ம் ஆண்டில், மக்களோடு செபத்தால் ஒன்றித்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டில், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற, ஈராக் திருத்தூதுப் பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.

உரோம் மார்செல்லோ ஆலயத்தில் திருத்தந்தை
உரோம் மார்செல்லோ ஆலயத்தில் திருத்தந்தை

எட்டு ஆண்டுகள் சாதனைகள்

இதுவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிக்குள் 25 மேய்ப்புப்பணி மற்றும், இத்தாலிக்கு வெளியே 33 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 340க்கும் மேற்பட்ட பொது மறைக்கல்வியுரைகள், 450க்கும் மேற்பட்ட மூவேளை செப உரைகள் மற்றும், அல்லேலூயா வாழ்த்தொலி உரைகள், சாந்தா மார்த்தா இல்லத்தில் ஏறத்தாழ 790 மறையுரைகளை ஆற்றியுள்ளார். 800 மறைசாட்சிகள் உட்பட, ஏறத்தாழ 900 புதிய புனிதர்களை திருஅவைக்கு அறிவித்துள்ளார். 101 புதிய கர்தினால்களை அறிவித்ததோடு, ஏழு கர்தினால்கள் அவையைக் கூட்டியுள்ளார்.

துறவியர் சிறப்பு ஆண்டு (2015-2016), புனித யோசேப்பு ஆண்டு (2020-2021), அன்பின் மகிழ்வு குடும்பம் ஆண்டு (2021-2022) உட்பட, பல்வேறு சிறப்பு ஆண்டுகளையும், தாத்தா பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் உலக நாள் உட்பட, பல்வேறு உலக நாள்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார். தாத்தா பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் உலக நாள், முதன் முதலாக, வருகிற ஜூலை மாதத்தில் சிறப்பிக்கப்படும். 

ஈராக்கில் திருத்தந்தை
ஈராக்கில் திருத்தந்தை
13 March 2021, 15:09