தேடுதல்

ஊர் நகரின் பல்சமய சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் ஊர் நகரின் பல்சமய சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஊர் நகரின் பல்சமய சந்திப்பில் திருத்தந்தை வழங்கிய உரை

கடவுள் பரிவுநிறைந்தவர் என்பதையும், நமது சகோதரர்கள், சகோதரிகளை வெறுப்பதால், நாம் அவரது பெயரைக் களங்கப்படுத்துகிறோம் என்பதையும், நமது தந்தை ஆபிரகாமின் நாட்டில், நாம் வலியுறுத்துகிறோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

இந்த இடம், நம் ஆரம்பங்களுக்கு, கடவுள் செயல்பாடுகளின் ஊற்றுகளுக்கு, நமது மதங்களின் பிறப்பிடத்திற்கு மீண்டும் நம்மை அழைத்துவந்துள்ளது. நமது தந்தையாம் ஆபிரகாம் வாழ்ந்த இவ்விடத்தில், நாம் நமது இல்லத்திற்குத் திரும்பி வந்துள்ளதைப்போல் தெரிகிறது. இங்குதான் கடவுளின் அழைப்பை ஆபிரகாம் கேட்டார்; இங்கிருந்து அவர் புறப்பட்ட பயணம், வரலாற்றை மாற்றியது. அந்த அழைப்பின், அந்த பயணத்தின் கனிகள் நாம். கடவுள் ஆபிரகாமிடம், அவரது கண்களை உயர்த்தி வானத்தை நிமிர்ந்து பார்க்கவும்,  விண்மீன்களை எண்ணிப்பார்க்கவும் கூறினார் (காண்க தொடக்க நூல் 15:5) அந்த விண்மீன்களில் ஆபிரகாம் தன் சந்ததியினரைப் பார்த்தார், நம்மைப் பார்த்தார்.

இன்று யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களாகிய நாம், ஏனைய மதங்களைச் சேர்ந்த நம் சகோதரர்கள், சகோதரிகளுடன், நம் தந்தையாம் ஆபிரகாமைப்போல வானத்தை நிமிர்ந்து பார்த்தபடி, பூமியில் பயணிப்பதன் வழியே, அவரைப் பெருமைப்படுத்துகிறோம்.

ஒருமைப்பாடு என்ற செய்தியை, வானம் நமக்கு வழங்குகிறது. மேலிருக்கும் எல்லாம் வல்லவர், நம்மை, பிறரிடமிருந்து பிரியாமல் இருக்கும்படி அழைக்கிறார். நம் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரையும் வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி, இறைவேண்டலை எழுப்ப உதவுவதே, ஆபிரகாமின் வழித்தோன்றல்களான நமக்கு முன்னிருக்கும் பணி. நம்மில் யாரும் நிறைவுள்ளவர்களாய் இல்லாததால், நம் அனைவருக்குமே இறைவேண்டல் தேவைப்படுகிறது. கடவுளை நாம் ஒதுக்கிவைப்பது, இவ்வுலகப் பொருள்களை வணங்குவதில் முடிகிறது. உண்மையான கடவுளை வணங்குவதும், நம் அயலவரை அன்பு செய்வதும்தான் உண்மையான மத உணர்வு. அனைத்திற்கும் மேலான ஆண்டவனை மறப்பதற்கோ, அல்லது, அவரைப்பற்றிய தவறான உருவத்தை வழங்குவதற்கோ முயலும் இன்றைய உலகில், ஆண்டவரின் நன்மைத்தனத்திற்கு சாட்சிகளாக இருக்க, மத நம்பிக்கையாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.

கடவுள் பரிவுநிறைந்தவர் என்பதையும், நமது சகோதரர்கள், சகோதரிகளை வெறுப்பதால், நாம் அவரது பெயரைக் களங்கப்படுத்துகிறோம் என்பதையும், நமது தந்தை ஆபிரகாமின் நாட்டில், நம்பிக்கை பிறந்த இந்நாட்டில், நாம் வலியுறுத்துகிறோம். பகைமை உணர்வு, தீவிரவாதம், மற்றும், வன்முறை, மத உணர்வுள்ள மனங்களில் பிறப்பதில்லை: அவை, மதத்தை காட்டிக்கொடுக்கும் துரோகங்கள். தீவிரவாதம், மதத்தை தவறாகப் பயன்படுத்தும்போது, நம்பிக்கையாளர்களாகிய நாம் மௌனம் காக்க இயலாது.

தீவிரவாதம், போர், மற்றும், வன்முறை ஆகிய கருமேகங்கள் இந்நாட்டின் மீது திரண்டுள்ளன. இதனால், இந்நாட்டின் அனைத்து மதத்தினரும், இனத்தினரும் துன்புற்றுள்ளனர். இவ்வேளையில், நான், யாஸிதி சமுதாயத்தை, தனிப்பட்ட முறையில் குறிப்பிட விரும்புகிறேன். இச்சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர், பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் கடத்தப்பட்டு, அடிமைகளாக விற்கப்பட்டு, வன்முறைகளையும், கட்டாய மத மாற்றத்தையும் சந்தித்துள்ளனர். இத்தகைய துன்பங்களை அடைந்த அனைவருக்காகவும் இன்று நாம் செபிப்போமாக. நமது அடிப்படை உரிமைகளான, மனசாட்சி சுதந்திரமும், மதச் சுதந்திரமும் மதிக்கப்படவேண்டும் என்று செபிப்போமாக.

இந்நாட்டின் வடப்பகுதியை தீவிரவாதம் ஆக்ரமித்தபோது, இப்பகுதியில் இருந்த ஆலயங்கள், துறவு இல்லங்கள், மற்றும் ஏனைய வழிபாட்டு தலங்கள் உட்பட, பல கலாச்சார, மற்றும் மத பாரம்பரியங்களும், கருவூலங்களும் வேண்டுமென்றே அழிக்கப்பட்டன. இருள் சூழ்ந்த இந்நேரங்களிலும், ஒரு சில விண்மீன்கள், தொடர்ந்து ஒளிர்ந்தன. மோசூல் நகரில், ஆலயங்களையும், துறவு இல்லங்களையும் மறுசீரமைத்த முஸ்லீம் இளையோரை எண்ணிப்பார்க்கிறேன். அதேபோல், இன்று, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தினர் இணைந்து, ஆலயங்களையும், மசூதிகளையும் மறுசீரமைத்து வருகின்றனர். நமது வழிபாட்டுத் தலங்களை, அமைதிக்கும், சந்திப்பிற்கும் ஏற்ற பாலைநிலத் சோலைகளாக உருவாக்க, நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம் நமக்கு உதவி செய்வாராக! அன்று ஆபிரகாம் வானத்தில் கண்ட அதே விண்மீன்களை நாமும் இன்று காண்கிறோம்.

அன்று, வானத்தை நிமிர்ந்து பார்த்தது, ஆபிரகாமுக்கு, ஒரு வேடிக்கையாக அமையவில்லை, மாறாக, அவரது பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அந்தப் பயணம் இந்த இடத்தில் துவங்கியது. அன்று ஆண்டவர், ஆபிரகாமை, ஊர் என்ற நகரிலிருந்து புறப்படச் சொன்னார் (காண்க. தொ.நூ. 15:7). ஆபிரகாம் துவங்கிய அப்பயணத்தில் பல தியாகங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அவர், தன் சொந்த நாட்டையும், குடும்பத்தையும் விட்டு வெளியேறியதால், பல்வேறு மக்களைக் கொண்ட குடும்பத்தின் தந்தையாக மாறினார்.

இதையொத்த அனுபவம் நமக்கும் ஏற்படுகிறது. நாமும், நம்மைவிட்டு புறப்பட அழைக்கப்படுகிறோம், ஏனெனில், நமக்கு மற்றவர்கள் தேவை. 'நாம் யாரும் தனித்து பாதுகாப்பு அடையமுடியாது' (Fratelli Tutti, 54) என்பதை, இந்த பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. இருப்பினும், மற்றவர்களைவிட்டு விலகிச்செல்லும் சோதனை எப்போதும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. நம்மை தற்போது சூழ்ந்துள்ள இந்தப் புயலில், மற்றவர்களைவிட்டு தனித்திருப்பது, நம்மை, எவ்வகையிலும் காக்கப் போவதில்லை.

நமது வாழ்வுப்பயணம், அமைதியின் பாதையில் செல்லவேண்டும் என்பதை, வானம் நமக்கு உணர்த்திவருகிறது. நீதியிலும், ஒருவரை ஒருவர் மதிப்பதிலும், இந்த அமைதி கட்டியெழுப்பப்படவேண்டும். அமைதி, ஒருபோதும், வெற்றிபெறுவோர், தோல்வியடைவோர் என்ற பாகுபாட்டை உருவாக்குவதில்லை, அனைவரையும், சகோதரிகளாக, சகோதரர்களாக மாற்றுவதே, உண்மை அமைதி. மத்தியக்கிழக்குப் பகுதி, பழங்காலக் காயங்களிலிருந்து குணமடைந்து, அமைதியை பெறுவதற்கு, நாம் செபிக்கிறோம். குறிப்பாக, இவ்வேளையில், போரினால் சிதைந்துள்ள சிரியா நாட்டை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

நம்மை இப்போது ஒருங்கிணைத்துள்ள முதுபெரும் தந்தை ஆபிரகாம், ஆண்டவரின் இறைவாக்கினராக விளங்கினார். "அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள்" (எசாயா 2:4) என்று, மற்றொரு இறைவாக்கினர், தன் மக்களைப்பற்றி கூறியுள்ளார். அவரது இறைவாக்கு, இன்றும் நிறைவேறவில்லை; அதற்கு மாறாக, வாள்களும், ஈட்டிகளும், இன்று, ஏவுகணைகளாகவும், வெடிகுண்டுகளாகவும் மாறியுள்ளன.

இத்தகைய ஒரு சூழலில், அமைதியின் பயணம் எங்கிருந்து ஆரம்பமாக முடியும்? பகைவர்கள் வேண்டாம் என்ற முடிவிலிருந்து. விண்மீன்களைக் காண்பதற்கு துணிவுள்ளவர்களுக்கு, இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு, பகைவர்கள் கிடையாது. அவர்கள் சந்திக்கும் ஒரே ஒரு பகை, அவர்களது உள்ளக் கதவுகளைத் தட்டி, உள்ளே நுழையவிரும்பும் வெறுப்பு மட்டுமே. இறைவனைப் பின்பற்றுவோருக்கு யாருமே எதிரி அல்ல. அவர்கள் எல்லாருக்காகவும் வாழ்கிறார்கள்.

அன்பு நண்பர்களே, இவை எல்லாம் சாத்தியமா? எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும்,  எதிர்நோக்குடன் வாழ்ந்த ஆபிரகாம் (காண்க. உரோமையர் 4:18) நம்மை உற்சாகப்படுத்துகிறார். வரலாற்றில் பலமுறை, இவ்வுலகம் காட்டிய வழிகளைப் பின்பற்றினோம், ஆனால், கடவுளின் உதவியோடு, நாம் உன்னதத்தை நோக்கி மாறமுடியும். மத நம்பிக்கையுள்ள நாம், வெறுப்பின் கருவிகளை, அமைதியின் கருவிகளாக மாற்றமுடியும்.

ஆயுதங்களுக்காக உலகத்தலைவர்கள் செலவிடும் நிதியை, மக்களுக்கு உணவு வழங்க பயன்படுத்துவதற்கு, அவர்களிடம் விண்ணப்பங்களை எழுப்புவது, நம் கரங்களில் உள்ளது. ஒருவரையொருவர் குறைகூறுவதற்கென எழும் குரல்களை மௌனமாக்கி, ஒடுக்கப்பட்டோரின் குரல்களைக் கேட்கும்படி செய்வது, நம் கரங்களில் உள்ளது. நமது பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தை, ஒரு சிலர், தங்கள் சுயநலத்திற்காக சுரண்டுவதை தடுப்பது, நம் கரங்களில் உள்ளது. கருவில் வளரும் உயிர்கள் முதல், முதிர்ந்த வயதுள்ள உயிர்கள் வரை அனைத்து உயிர்களும் மதிக்கப்படவேண்டும் என்ற உண்மையை உணர்த்துவது, நம் கரங்களில் உள்ளது. வானத்தை நிமிர்ந்து பார்க்கவும், அங்கு, நமது தந்தை ஆபிரகாம் கண்ட விண்மீன்களை நாமும் காணவும், துணிவு பெறுவது, நம் கரங்களில் உள்ளது.

நம் தந்தை ஆபிரகாம் மேற்கொண்ட பயணம், அமைதியின் ஆசீராக விளங்கியது. எனினும், அது எளிதானதாக அமையவில்லை. எதிர்பாராதவற்றையும், கடினமானவற்றையும் அவர் சந்திக்கவேண்டியிருந்தது. நமக்கு முன்னரும், இத்தகையதொரு பயணம் காத்திருக்கிறது. தாவூது, ஹசன் (Dawood and Hasan) என்ற, கிறிஸ்தவரும் முஸ்லிமும் பகிர்ந்துகொண்ட சாட்சியம் என்னைக் கவர்ந்தது. தங்களுக்குள் உள்ள பல வேறுபாடுகளால் மனம் தளராமல், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்று, பணியாற்றுகின்றனர். இருவரும் இணைந்து எதிர்காலத்தை கட்டியெழுப்புகின்றனர். நாம் முன்னேறிச் செல்ல இதுவே வழி. குறிப்பாக, கடந்த கால மோதல்களால் தங்கள் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளையோருக்கு, இதுவே வழி.

மற்றவர்களுடன் இணைந்து, நாம் கடந்த காலக் காயங்களை குணமாக்கமுடியும். Sabean Mandean சமுதாயத்தைச் சேர்ந்த Najy என்ற கிறிஸ்தவர், தன் அயலவரான முஸ்லிம் ஒருவரைக் காக்கும் முயற்சியில் தன் உயிரை இழந்தார் என்று Rafah அவர்கள் கூறியது, ஓர் உன்னத எடுத்துக்காட்டு. பல்வேறு இன்னல்களால், இப்பகுதியிலிருந்து, வெளியேறும் கட்டாயத்திற்கு, பலர் உள்ளானபோது, Rafah அவர்கள், தொடர்ந்து இங்கு தங்கியிருக்க முடிவெடுத்தது பாராட்டுக்குரியது. இங்கிருந்து வெளியேறியவர்கள், மீண்டும் வந்து சேரும்போது, அவர்களுக்குத் தேவையான வரவேற்பு கிடைக்கட்டும்.

இந்த நாட்டிற்கே உரிய வரவேற்பு, விருந்தோம்பல் ஆகிய பண்புகளில் வளர்ந்திருந்த ஆபிரகாம், கடவுளை வரவேற்று விருந்து கொடுத்ததால், அவருக்கு ஒரு மகன் வழங்கப்பட்டார் (காண்க தொ.நூ. 18:1-10). பல மதங்களைச் சேர்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, மனிதகுலம் அனைத்தும் ஒரே குடும்பம் என்றும், வரவேற்பும், விருந்தோம்பலும் இக்குடும்பத்தின் பண்புகளாக இருக்கவேண்டும் என்றும், கடவுள் காணும் கனவை நனவாக்க, நம்மையே அர்ப்பணிப்போம். ஆபிரகாம் கண்ட அதே வானத்தை, நாமும் நிமிர்ந்து பார்த்து, இவ்வுலகின் அமைதிப் பயணத்தைக் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2021, 11:48