தேடுதல்

உரோம் நகர் பாடகர் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் உரோம் நகர் பாடகர் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

திருத்தந்தை - திருஅவை வாழ்வில் முக்கிய பங்காற்றும் இசை

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், இசைக்கலைஞர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த நெருக்கடிகளைத் தாண்டி, அவர்கள் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருவழிபாடு மற்றும் நற்செய்தியின் பறைசாற்றுதல் ஆகிய முக்கிய செயல்பாடுகளில், இசை முக்கிய பங்காற்றுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 4 இவ்வியாழனன்று வெளியிட்ட காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

திருப்பீடக் கலாச்சார அவை, புனித இசையின் பாப்பிறை நிறுவனம், மற்றும், புனித ஆன்செல்ம் பல்கலைக்கழகத்தின் திருவழிபாட்டு துறை ஆகிய நிறுவனங்கள் இணைந்து, பிப்ரவரி 4, 5 ஆகிய இரு நாள்கள், உரோம் நகரில் நடத்தும் மெய் நிகர் கருத்தரங்கு ஒன்றுக்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்" (எசாயா 42:10) என்று, இறைவாக்கினர் வழங்கும் அறிவுரைக்கு ஏற்ப, விவிலியம் முழுவதும் இசைக்கு தனியொரு இடம் வழங்கப்பட்டுள்ளது என்று, தன் செய்தியின் துவக்கத்தில் திருத்தந்தை கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், இசை நிகழ்ச்சிகளும், இசைக் கலைஞர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை, இச்செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நெருக்கடிகளையும் தாண்டி, இசைக்கலைஞர்கள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியுள்ளார்.

இந்த பெருந்தொற்று நீங்கி, நாம் மீண்டும் பழைய ஆர்வத்துடன் புனித இசையில் பங்கேற்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை இச்செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை, "இசை இருக்குமிடத்தில், தீமையே எதுவும் இருக்க இயலாது" என்று, Don Quixote என்ற நூலில், Miguel Cervantes அவர்கள் கூறியுள்ளதை தன் செய்தியில் மேற்கோளாகக் கூறியுள்ளார்.

இசையின் ஒரு முக்கிய அங்கமாக மௌனம் உள்ளது என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனுக்குப் புகழ்ப்பாட அழைப்பு விடுத்த இறைவாக்கினர் எசாயா, அதே பகுதியில், "வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்; அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்" என்று கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட்-19 உருவாக்கிய நெருக்கடியால் உலகெங்கும் நிலவிய மௌனமும், அமைதியும், இறைவனின் குரலையும், அயலவரின் குரலையும் கேட்க உதவியாக இருந்ததா என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியின் இறுதியில் எழுப்பியுள்ளார்.

இறைவனின் குரலையும், அயலவரின் குரலையும் கேட்பதால் உருவாகும் நல்லிணக்கம், உலகளாவிய உடன்பிறந்த நிலையை உருவாக்குவதாக என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2021, 15:20