தேடுதல்

Vatican News
மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள் மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள் 

பிப்ரவரி 2,4 ஆகிய சிறப்பு நாள்களுக்கு டுவிட்டர் செய்திகள்

மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாளையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோர் உலக நாளையும் மையப்படுத்தி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 4, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாளையும், இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் ஒரு கருத்தையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரு டுவிட்டர் செய்திகளாக, பிப்ரவரி 3ம் தேதி வெளியிட்டார்.

"திருவழிபாட்டின் அழகைக் கொண்டு, திருஅவை தனக்குத்தானே நற்செய்தியைப் பறைசாற்றுவதோடு, மற்றவருக்கும் அதை பறைசாற்றுகிறது. திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கிறிஸ்துவை, நேரடியாகவும், உண்மையாகவும் சந்திக்கும் அருளை வேண்டுவோம். அதன் வழியே நம் வாழ்வை இறைவனுக்கு ஓர் ஆன்மீகப் பலியாக ஒப்புக்கொடுப்போம்" என்ற சொற்களை, தன் முதல் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பதிவு செய்திருந்தார்.

"நாளை, நாம், மனித உடன்பிறந்த நிலையின் நாளைக் கொண்டாடவிருக்கிறோம். நாம் இவ்வுலகில் அமைதியிலும், உடன்பிறந்த உணர்வுடனும் வாழ்வதற்கு, ஒவ்வொரு நாளும் இறைவேண்டலையும், செயல்பாடுகளையும் மேற்கொள்வோமாக" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், பிப்ரவரி 2, இச்செவ்வாயன்று, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோர் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று, 'அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு' என்ற 'ஹாஷ்டாக்'குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"ஆண்டவர், நம்மை, தனித் தனிப் பாடகர்களாக பாடுவதற்கு அழைக்கவில்லை, மாறாக, ஒரு சில சுவரங்களைத் தவறாகப் பாடக்கூடிய ஒரு பாடகர் குழுவின் அங்கமாக இருக்க அழைத்துள்ளார்" என்ற சொற்களை, துறவு வாழ்வைக் குறித்து, தன் டுவிட்டர் பகிர்வாக திருத்தந்தை வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

பிப்ரவரி 3, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3.048 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

03 February 2021, 15:39