தேடுதல்

Vatican News
இரண்டாம் உலகப் போர்க் கைதிகளுக்குப் பணியாற்றிய வத்திக்கான் வானொலி இரண்டாம் உலகப் போர்க் கைதிகளுக்குப் பணியாற்றிய வத்திக்கான் வானொலி  

உலக வானொலி நாளையொட்டிய டுவிட்டர்

வானொலி, வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும், வார்த்தையை எடுத்துச்செல்லும் அழகானதொரு சிறப்புப்பண்பை கொண்டிருக்கிறது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

பிப்ரவரி 13, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட உலக வானொலி நாளை மையப்படுத்தி, வானொலி (#Radio), உலகவானொலிநாள் (#WorldRadioDay) ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன், வானொலியின் தனிப்பண்பை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“வானொலி, வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும், வார்த்தையை எடுத்துச்செல்லும் அழகானதொரு சிறப்புப்பண்பை கொண்டிருக்கிறது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், இச்சனிக்கிழமையன்று இடம்பெற்றிருந்தன.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஓர் அங்கமான, யுனெஸ்கோ எனப்படும், கல்வி, அறிவியல் மற்றும், கலாச்சார அமைப்பின் உறுப்பு நாடுகள், 2011ம் ஆண்டில், உலக வானொலி நாளை அறிவித்தன. அதற்கு அடுத்த ஆண்டில், அந்த அறிவிப்பை அங்கீகரித்த, ஐ.நா. பொது அவை, அந்த நாள், அனைத்துலக நாளாக (WRD), ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 13ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் என்றும் கூறியது. “புதிய உலகம், புதிய வானொலி” என்ற தலைப்பில், இவ்வாண்டு, உலக வானொலி நாள் சிறப்பிக்கப்பட்டது.

யுனெஸ்கோ - வானொலியின் சிறப்பு

மேலும், இந்த உலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ இயக்குனர் Audrey Azoulay அவர்கள், 110 ஆண்டுகள் பழமையுடைய வானொலி, நம் சமகாலச் சமுதாயங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை, கோவிட்-19 உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

உலகின் மாற்றத்திற்கு ஏற்ப, பரிணாம வளர்ச்சியிலும், புதுமையைப் படைத்தலிலும், சுதந்திரமாகத் தொடர்புகளை உருவாக்குவதிலும், வானொலி, தனிமுத்திரை பதித்துள்ளது  என்று கூறியுள்ள Azoulay அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, வளரும் நாடுகளில் வானொலியின் ஊடுருவலை, 75 விழுக்காட்டுக்குமேல் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (UN)

13 February 2021, 15:27