தேடுதல்

, இப்புதனன்று இடம்பெறாது. திருநீற்றுப் , இப்புதனன்று இடம்பெறாது. திருநீற்றுப்  

திருத்தந்தையின் திருநீற்றுப் புதன் திருப்பலி

பிப்ரவரி 17, இப்புதன் உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருநீறை ஆசீர்வதித்து, திருப்பலி நிறைவேற்றுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அனைத்திலும் இறையுணர்வின்றி பரபரப்பாகச் செயல்படும்போது, விண்ணக வாழ்வு பற்றிய உணர்வை இழப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 16, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் பக்கத்தில், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இப்போது பதட்டத்துடன் ஆற்றும் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இப்போதைய நிலைபற்றி நாம் மனத்தளர்ச்சியடைந்தால், என்றென்றும் நிலைத்திருப்பது பற்றி மறந்துவிடுவோம். அந்நிலையில், கடந்துபோகும் மேகங்களைப் பின்தொடர்வோம், மற்றும், வானகத்தின் மீதுள்ள பார்வையை இழந்துவிடுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன. 

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பிப்ரவரி 17, இப்புதன், உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருநீற்றுப் புதன் திருப்பலி நிறைவேற்றுவார்.

இதனால், புதன்கிழமைகளில் வழக்கமாக இடம்பெறும் திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை, இப்புதனன்று இடம்பெறாது.

திருநீற்றுப் புதன் வழிமுறைகளில் மாற்றம்

கோவிட்-19 பெருந்தொற்று சூழலில், பிப்ரவரி 17, இப்புதனன்று சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதன் திருப்பலியில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளில், ஒரு சில மாற்றங்களை, திருப்பீடத்தின் இறைவழிபாட்டு பேராயம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

திருநீற்றுப் புதன் திருப்பலியின்போது, பீடத்தில் வைக்கப்பட்டுள்ள சாம்பலை ஆசீர்வதிக்கும் செபங்களை அருள்பணியாளர் கூறியபின், சாம்பலின் மீது அர்ச்சிக்கும் நீரைத் தெளிப்பார். அவ்வேளையில், "மனம் திரும்பி, நற்செய்தியை நம்புங்கள்" அல்லது, "மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்ற சொற்களை, பீடத்தில் இருந்தவண்ணம், ஒரே ஒரு முறை மட்டுமே அருள்பணியாளர் கூறுவார்.

அதைத் தொடர்ந்து, அருள்பணியாளர் தன் கரங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, முகத்தில் கவசம் அணிந்துகொண்டு, மக்களுக்கு சாம்பலை வழங்கும்போது, அந்த சாம்பலை அவர்கள் மீது தெளிக்கவேண்டும் என்றும், அவ்வேளையில், எந்த ஒரு மந்திரத்தையும் சொல்லக்கூடாது என்றும் திருவழிபாட்டு பேராயம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2021, 15:11