தேடுதல்

Vatican News
வத்திக்கானில் வறியோருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் வத்திக்கானில் வறியோருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள்  (Vatican Media)

வறியோருக்கு மருந்துகள் தேவைப்படுகின்றன

மருந்து வங்கி எனப்படும், இத்தாலிய அரசு-சாரா அமைப்பு ஒன்று, பிப்ரவரி 09, இச்செவ்வாய் முதல், பிப்ரவரி 15, வருகிற திங்கள் வரை, மருந்துகளை சேகரிக்கும் பணியைத் துவக்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இக்காலத்தில் வறியோருக்கு மருந்துகள் அதிகமாகத் தேவைப்படுவதால், அவற்றை கொடுத்து உதவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 09, இச்செவ்வாயன்று, இத்தாலிய மொழியில் வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

“இன்றிலிருந்து, பிப்ரவரி 15ம் தேதி வரை, மருந்து வங்கி அமைப்பு, மருந்துகளைச் சேகரிக்கும் நாள்களாக கடைப்பிடித்து வருகிறது. இந்நாள்களில் நீங்கள் மருந்துக் கடைக்குச் செல்லலாம், மற்றும், வறியோருக்காக ஒரு மருந்தை நன்கொடையாக வழங்கலாம். அனைவரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கு, இந்த ஆண்டு, இதுவரை ஒருபோதும் இல்லாத அளவுக்கு, மிகவும் முக்கியமானது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.  

இத்தாலிய மருந்து வங்கி

மருந்து வங்கி (Banco Farmaceutico) எனப்படும், இத்தாலிய அரசு-சாரா அமைப்பு ஒன்று, பிப்ரவரி 09, இச்செவ்வாய் முதல், பிப்ரவரி 15, வருகிற திங்கள் வரை, மருந்துகளை சேகரிக்கும் பணியைத் துவக்கியுள்ளது. “இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது மருந்துக்கடைக்காரர்களின் உதவி தேவைப்படுகின்றது” என்ற தலைப்பில், இந்த பிறரன்புப் பணியை அந்த அமைப்பு, இச்செவ்வாயன்று ஆரம்பித்துள்ளது.

இந்தப் பணி பற்றி செய்தி வெளியிட்டுள்ள, அந்த அமைப்பின் தலைவர் Sergio Daniotti அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று புதுவிதமான வறுமையை உருவாக்கியுள்ளது என்றும், இந்த நிலையை அகற்றுவதற்கு உடனடியாகப் பணியாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மருந்து வங்கி அமைப்பு, நன்கொடையாளர்கள், மற்றும், நிறுவனங்களிடமிருந்து மருந்துகளைப் பெற்று, ஏழை மக்களின் உடல்நலனுக்காகப் பணியாற்றும், 1,800க்கும்  மேற்பட்ட பிறரன்பு அமைப்புகளுக்கு உதவி வருகிறது.

பாதுகாப்பான இணையதள உலக நாள்

மேலும், பிப்ரவரி 09, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட, பாதுகாப்பான இணையதள உலக நாளுக்கென, வழக்கமான ஒன்பது மொழிகளில், மற்றொரு டுவிட்டர் செய்தி ஒன்றையும், திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.  

நாம் அமைக்கும் சமூகத்தொடர்புகள், நாம் பகிர்ந்துகொள்ளும் தகவல் போன்றவற்றிற்கு நாம் அனைவருமே பொறுப்பு. நாம் எல்லாரும் உண்மையின் சான்றுகளாக விளங்கவேண்டும் என்ற சொற்கள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் பாதுகாப்பான இணையதள உலக நாள் என்ற ஹாஷ்டாக்குடன் பதிவாகியிருந்தன. 

09 February 2021, 13:26