தேடுதல்

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் உருவங்கள் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் உருவங்கள்  

“பரந்துவிரிந்த ‘நாம்’ என்ற உணர்வை நோக்கி”

கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மறைப்பணியில் நாம் எதிர்நோக்கும் சவால்களைச் சந்திப்பதற்கு, இறைவேண்டல்  நமக்கு எவ்வளவு இன்றியமையாதது என்ற கருத்தை வலியுறுத்தி, தவக்காலம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன், தன் டுவிட்டர் பக்கத்தில், பிப்ரவரி 27, இச்சனிக்கிழமையன்று, செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“எதிர்நோக்கு, நம் மறைப்பணியில் நாம் சந்திக்கும் சவால்கள், மற்றும், தெரிவுகளுக்கு ஒளியூட்டுகின்ற அக ஒளியாக, கருத்தமைதி மற்றும், அமைதியாகச் செபித்தல் ஆகியவற்றின் வழியாக, நமக்கு வழங்கப்படுகின்றது. எனவே, நாம் இறைவேண்டல் செய்யவேண்டும், மற்றும், மறைவாக, இறைத்தந்தையின் கனிவான அன்பைச் சந்திக்கவேண்டும் (காண். மத்.6:6)” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி கடைப்பிடிக்கப்படும், 107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்கென தெரிவுசெய்துள்ள கருப்பொருளை, திருப்பீட தகவல் தொடர்பகம், பிப்ரவரி 27, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது.

“பரந்துவிரிந்த ‘நாம்’ என்ற உணர்வை நோக்கி” என்பது, 107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்குரிய தலைப்பாகும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவுசெய்துள்ள இந்த தலைப்பு, ஆறு சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்படும் என்றும், பன்மைத்தன்மையில் குழும உணர்வை உருவாக்கும் திறன்படைத்த, அனைவரையும் சென்றடைகின்ற, மற்றும், எல்லாரையும் உள்ளடக்கிய திருஅவை வழியாக, முழு மனித குடும்பத்தின் மீது அக்கறை காட்டவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியுள்ளது.     

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதிலும், அதன் வழியாக, நம் பொதுவான குடும்பத்தில், "நாம்" என்ற உணர்வில் மற்றவர் மீது அக்கறைகொண்டு, அவர்களைத் திறந்த மனதோடு வரவேற்பதிலும் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படும் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியுள்ளது.

இந்த உலக நாளைக் கொண்டாடுவதற்குப் போதுமான அளவு தயாரிப்புக்களை மேற்கொள்வதற்கு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, இறையியலாளர்கள் மற்றும், வல்லுனர்களின் சிந்தனைகளை, ஒவ்வொரு மாதமும் ஊடகங்கள் வழியாக வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2021, 15:23