தேடுதல்

நல்ல சமாரியர் போல, மற்றவர் துன்பத்தால் தொடப்பட அனுமதிப்போம்

நாம் கடவுளின் வாக்குறுதியைக் கொண்டிருக்கிறோம், மற்றும், கடவுள், எப்போதுமே வாக்கு மாறாதவர் என்பதை அறிவிக்கவேண்டும், மற்றும், அதை நினைவில் கொண்டிருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டம் தொடங்கியுள்ள, 65வது சமயக் கல்வி மாநாட்டிற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல சமாரியர் போல, மற்றவர் துன்பத்தால் தொடப்பட நம்மை அனுமதிப்போம் என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 18, இவ்வியாழனன்று, "வாக்குறுதியை அறிவியுங்கள்!" என்ற தலைப்பில், இணையம் வழியாக, லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டம் துவக்கியுள்ள இம்மாநாட்டிற்கு, இஸ்பானிய மொழியில் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற தன் திருமடலில் வலியுறுத்தியுள்ள கருத்துக்களை பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

உடன்பிறந்த உணர்வு, அருகாமை, அக்கறை, பராமரிப்பு, உடனிருத்தல், தியாகம் ஆகியவற்றின் அவசியத்தை, கோவிட்-19 பெருந்தொற்று, அண்மை மாதங்களில் நமக்கு கற்றுத்தந்துள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை, கனவு காணுங்கள் மற்றும், முன்னோக்கிப் பாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் கடவுளின் வாக்குறுதியைக் கொண்டிருக்கிறோம், மற்றும், கடவுள், எப்போதுமே வாக்கு மாறாதவர் என்பதை அறிவிக்கவேண்டும், மற்றும், அதை நினைவில் கொண்டிருக்கவேண்டும் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக, திருத்தந்தை வழங்கியுள்ள இக்காணொளிச் செய்தியில்,  ஒவ்வொரு தலைமுறையின் ஆண்களும், பெண்களும், உறவு, அறிவு, கலாச்சாரம், மற்றும், ஆன்மீக சக்திகளின் வாக்குறுதியை எடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“அனைவரும் உடன்பிறந்தோர்” திருமடலிலிருந்து சில மேற்கோள்களைக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒன்றுசேர்ந்து கனவு காண்பதும், முன்னோக்கிப் பார்ப்பதும், எவ்வளவு முக்கியம் என்பதையும், இளையோர் நம்பிக்கையுடன் இருப்பதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

மனித அழகு, உடன்பிறந்த உணர்வு, மற்றும், நட்புணர்வு, ஆகியவற்றின் புதிய அழகின் கவிஞர்களாக வாழுமாறு இளையோரை ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரே மனிதக் குடும்பமாக, ஒரே சதையைப் பகிர்ந்துகொள்ளும் உடன்பயணிகளாக, நம் பொதுவான இல்லமாகிய ஒரே பூமியின் பிள்ளைகளாக, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள், மற்றும், உறுதிப்பாடுகளின் வளமையைக் கொணர்பவர்களாக, அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதற்கு, நம் கனவுகள் உதவவேண்டும் என்று கூறியுள்ளார்.

லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டம், பிப்ரவரி 21, வருகிற ஞாயிறுவரை நடத்துகின்ற, சமயக் கல்வி மாநாடு, அந்த உயர்மறைமாவட்டத்தின் 65வது சமயக் கல்வி மாநாடாகவும், 50வது இளையோர் நாளைச் சிறப்பிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2021, 14:21