தேடுதல்

Vatican News
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டு குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டு குழந்தைகள்   (AFP or licensors)

இறைவேண்டல் வழியாக, இறைத்திட்டங்களை தெரிந்துகொள்வோம்

திருத்தந்தை : மருத்துவர்களையும், புற்றுநோயால் துயருறும் குழந்தைகளையும் அன்னைமரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து, அன்னைக்குரிய அக்கறையை, அத்தாயிடம் வேண்டுகிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

புற்றுநோயால் துயருறும் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் அனைத்துலக நாள் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துயருறுவோர் அருகில், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பணியாற்றும் அனைவருக்கும் இறைவன் அருள்புரிவாராக என தன் டுவிட்டர் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவர்களையும் குழந்தைகளையும் அன்னைமரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகவும், அன்னைக்குரிய அக்கறையுடன், அத்தாய், அவர்களைப்பேணி காப்பாராக எனவும் இத்திங்கள்கிழமையின் முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

'நமக்குரிய இறைத்திட்டங்களை தெரிந்துகொள்ள, இறைவேண்டல் வழியாக, அவருடன் நம் உறவுகளைப் பலப்படுத்துவோம், அதன் வழியாக, நம்மை அக்கறையுடன் வழிநடத்தும் இறைவன், கருணையுடன் செயல்படுபவர் என்பதை கண்டுகொள்வோம்', என்ற சொற்கள் திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், பிப்ரவரி 14, இஞ்ஞாயிறன்று நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள், மற்றும், அடுத்திருப்பவர்களிடமிருந்து நம்மை பிரித்திடும் காயங்கள்,தோல்விகள்,துயர்கள், தன்னலம் போன்றவைகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேளைகளில், இயேசு நம் அருகில் வந்து நம் காயங்களைத் தொட்டுக் குணப்படுத்துகிறார், என தன் முதல் டுவிட்டரில் எடுத்துரைத்துள்ளார்.

புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸின் திருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தி, ஒன்றிப்பை நோக்கிய பாதையில் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஆவல் வளரவேண்டும் எனற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும், அவரின் மூன்றாவது டுவிட்டர் செய்தியோ, புனித வாலன்டைன் நாளில், அனைத்து இளம் தம்பதியோரோடும், மண ஒப்பந்தம் ஆகியிருப்போருடனும் செபத்தில் உடன் நடப்பதாக கூறுகிறது.

கொலம்பியா நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு தற்காலிகமாக புகலிடம் வழங்க முன்வந்திருக்கும் கொலம்பியா அரசின் செயல்பாட்டிற்கு அந்நாட்டு ஆயர்களோடு இணைந்து தன் பாராட்டுக்களை வெளியிடுவதாக ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட தன் நான்காவது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

15 February 2021, 15:07