தேடுதல்

Vatican News
சோயாபீன்ஸின் தரத்தைக் காட்டும் விவசாயி சோயாபீன்ஸின் தரத்தைக் காட்டும் விவசாயி 

ஊட்டச்சத்துக்குறைவு, பசியை அகற்ற உதவும் பயறுவகைகள்

நிலங்களைச் சேதப்படுத்தாமல், பயிரிடுவது, உடனடித் தேவையாக உள்ளது. இவ்வாறு செய்வதன் வழியே, நாமும், நம் வருங்காலத் தலைமுறைகளும், அதன் பலன்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

உலக பயறுவகை நாளை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பான FAO நடத்திய மெய்நிகர் நிகழ்வுக்கு, பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

உலகில் நிலவும் சத்துணவு பற்றாக்குறை, மற்றும், பசியை அகற்றுவதற்கு, உணவை உற்பத்தி செய்வதிலும், அவற்றை விநியோகிப்பதிலும் முக்கிய பங்காற்றும் கிராமப்புற, மற்றும், பழங்குடி இனத் தொழிலாளர்களை, குறிப்பாக பெண்களை, திருத்தந்தை பாராட்டியுள்ளார் என்று, பேராயர் காலகர் அவர்கள், அச்செய்தியில் கூறியுள்ளார்.

பயறு வகைகளும், உணவு பாதுகாப்பும்

உலகளாவிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த, பயறுவகைகள், அளப்பரிய சக்தியைக் கொண்டுள்ளன என்றும், உளுந்து, துவரை, பாசிப்பருப்பு, மொச்சை, பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகள், எளிமையானவை, மற்றும், ஊட்டச்சத்து நிறைந்தவை என்றும், அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

பயறு வகைகள், புவியியல் எல்லைகள், சமுதாயப் பிணைப்புகள், கலாச்சாரங்கள் போன்ற எல்லாவற்றையும் கடந்து, அனைவரின் உடல்நலத்திற்குப் பயனாக உள்ளன என்றும், நம் அன்றாட உணவில், பல்வேறு புரதச்சத்துக்களின் தேவைகளை இவை நிறைவேற்றுவதால், பல குடும்பங்களின் உணவில், இவற்றை காணலாம்  என்றும், பேராயர் காலகர் அவர்கள் அனுப்பிய செய்தி கூறுகிறது. 

பயறு வகைத் தாவரங்களைக் கைகளால் பிடுங்குவதற்கு, கரடுமுரடான கரங்கள் தேவைப்படுகின்றன, இந்த கடினமான வேலைகளை, கிராமப்புறத் தொழிலாளர்கள், குறிப்பாக, பெண்கள் ஆற்றிவருகின்றனர் என்று கூறும் அச்செய்தி, சிறார் உட்பட ஏராளமான மக்கள், மிக அடிப்படை வளங்கள், நலவாழ்வு வசதிகள், மற்றும், போதுமான உணவு கிடைக்காமல், இன்றும் உள்ளனர் என்று கூறியுள்ளது.

நலவாழ்வு, உலகளாவிய உரிமை

நிலங்களைச் சேதப்படுத்தாமல், அவற்றை பயிரிடுவது உடனடித் தேவையாக உள்ளது என்றும், இவ்வாறு செய்வதன் வழியே, நாமும், நம் வருங்காலத் தலைமுறைகளும், அதன் பலன்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும், வலியுறுத்தும் அச்செய்தி, நலமான வாழ்வு, உலகளாவிய உரிமை என்றும், இதனை அனைத்து நாடுகளும் இயலக்கூடியதாய் ஆக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

2016ம் ஆண்டில் FAO அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட உலக பயறுவகை நாளை அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, அந்த நாள், பிப்ரவரி 10ம் தேதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தது.

13 February 2021, 15:35