தேடுதல்

Vatican News
இத்தாலிய மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்களுடன் திருத்தந்தை (20.06.2020) இத்தாலிய மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்களுடன் திருத்தந்தை (20.06.2020)  (ANSA)

பெருந்தொற்று நோய்க்காலப் பணியாளர்களுக்கு நன்றி

பெருந்தொற்று காலத்தில் சிறப்புப் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களின் எடுத்துக்காட்டு, அவர்களுக்குரிய நன்றியை வெளிப்படுத்தவும், ஆழமான சிந்தனைக்கும் அழைப்பு விடுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்காலப் பணியில் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களை தான் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஓராண்டு கால கோவிட்-19 பெருந்தொற்று நோய்க் காலத்தின்போது மக்கள் பணியில் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும், நலப் பணியாளர்களுக்கென திருப்பீடம் நிறைவேற்றிய நன்றி வழிபாட்டையொட்டி,  திருப்பீடக் கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்காலத்தில் உயிரிழந்த, நலப்பணியாளர்களை நினைவுகூரும் இவ்வேளையில், அவர்களின் தாராள மனப்பான்மை, மற்றும், வீரத்துவப் பண்புகள் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

தங்கள் வாழ்வையே இழக்கும் அளவுக்கு இப்பெருந்தொற்று காலத்தில் சிறப்புப் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களின் எடுத்துக்காட்டு, அவர்களுக்குரிய நன்றியை வெளிப்படுத்தவும், ஆழமான சிந்தனைக்கும் அழைப்பு விடுக்கிறது, என தன் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனித்துவம், மற்றும் தன்னலத்திற்கு எதிராக, மனிதரின் இதயத்தில் குடியிருக்கும் பிறருக்கான அர்ப்பணத்தின் சாயலாக வெளிப்படும் தடுப்பு மருந்துதான், இந்த நலப்பணியாளர்களின் சேவை என, தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த கோவிட்-19 காலத்தில் உதவி தேவைப்படும் மக்களோடு அருகிருந்து அவர்களுக்கு உதவிவந்த நலப்பணியாளர்களை நன்றியுடன் நினைவுகூர்வதாக தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நினைவு வழிபாட்டில் பங்குகொள்ளும் அனைவரோடும் ஆன்மீக  முறையில் ஒன்றித்திருப்பதாகவும், அவர்களுக்கு தன் ஆசீரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

WHO எனப்படும், உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இன்றைய உலகில் இதுவரை 11 கோடியே இரண்டு இலட்சத்து 24 ஆயிரத்து 709 பேர், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 24 இலட்சத்து 41 ஆயிரத்து 709 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோவிட்-19 காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 2,900க்கும் மேற்பட்ட நலப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

20 February 2021, 14:54