தேடுதல்

வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் 

வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் யூபிலி ஆண்டு

வியாகுல அன்னை மீது மிகுந்த பக்திகொண்டிருந்த, திருப்பாடுகள் துறவு சபையின் புனித கபிரியேல், காசநோயால் தாக்கப்பட்டு, தனது 24வது வயதில் இறைபதம் சேர்ந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் அவர்கள், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டின் நினைவாகச் சிறப்பிக்கப்படும் யூபிலி ஆண்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

1862ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி, இத்தாலியின் Gran Sasso தீவில், தனது 24வது வயதில் இறைபதம் சேர்ந்த வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் அவர்கள், கிறிஸ்தவத்திற்கு மிகச்சிறப்பான முறையில் சான்றாக விளங்கியவர், மற்றும், அவரின் வாழ்வு, உலகளாவியத் திருஅவைக்கு, குறிப்பாக, புதிய தலைமுறைகளுக்கு, சிறந்தோர் எடுத்துக்காட்டு என்றும், திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

வியாகுல மரியன்னையின் புனித கபிரியேல் யூபிலி ஆண்டின் துவக்கமாக, அப்புனிதரின் திருத்தலத்தில், புனிதக் கதவுகள் திறக்கப்படும் நிகழ்வில் பங்குகொள்ளும், இத்தாலியின் Abruzzo மற்றும், Molise மறைமாவட்ட கிறிஸ்தவக் குழுமங்கள், திருப்பாடுகளின் துறவு சபையினர், மற்றும், அனைவரோடும், தான் ஆன்மீக முறையில் ஒன்றித்திருப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இளையோரின் பாதுகாவலராகிய இந்த புனிதரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள், இப்புனிதரிடம் விளங்கிய எடுத்துக்காட்டான வாழ்வால் அனைவரும் புத்துயிர்பெற உதவும் என்று, தான் நம்புவதாகவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

கபிரியேல், தான் வாழ்ந்த காலத்தில், உயிர்த்துடிப்புள்ள இளைஞராக, உலக இன்பங்களை உதறித்தள்ளிவிட்டு, கிறிஸ்துவில் அடைக்கலம் புகுந்தவர் என்றும், தன்னைப்போல் இன்றைய இளையோரும், கடவுளைத் தேடுவதிலும், ஒருவர் ஒருவருக்கு, குறிப்பாக, நலிந்த சகோதரர், சகோதரிகளுக்கு ஆர்வத்துடன் உதவுவதிலும் வளருமாறு அழைப்பு விடுக்கின்றார் என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

1838ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி பிறந்த புனித கபிரியேல், 1856ம் ஆண்டில் திருப்பாடுகள் துறவு சபையில் சேர்ந்தார். வியாகுல அன்னை மீது மிகுந்த பக்திகொண்டிருந்த இவர், காசநோயால் தாக்கப்பட்டு, தனது 24வது வயதில் இறைபதம் சேர்ந்தார். 1920ம் ஆண்டில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், இவரை புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2021, 15:32