தேடுதல்

Vatican News

வத்திக்கான் வானொலியின் 90வது ஆண்டு - திருத்தந்தையின் வாழ்த்து

வத்திக்கான் வானொலி, உலகில் மிக ஒதுக்குப்புறமான இடங்களுக்கும் தன் செய்தியைக்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று, தன் 90வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் திருத்தந்தையின் வானொலியாகிய, வத்திக்கான் வானொலியின் பணியாளர்கள் அனைவருக்கும், தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் செய்தி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உங்களுக்கு எனது மகிழ்வான நல்வாழ்த்துக்கள் என்று, தன் செய்தியைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் வானொலியில் 69 நாடுகளிலிருந்து பணியாற்றும் அனைவரும் அன்பார்வத்துடன் அப்பணியை ஆற்றி வருவதற்கு நன்றி என்று, அதில் கூறியுள்ளார்.

நம் வரலாற்றின் நினைவைப் பாதுகாப்பதும், கடந்த காலத்திற்காக இல்லாமல், நாம் கட்டியெழுப்ப அழைக்கப்பட்டுள்ள வருங்காலத்திற்காக ஏங்குவதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வத்திக்கான் வானொலி பரந்த அளவில் மக்களைச் சென்றடைவதற்கு, தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.    

தெளிந்து தேர்தல் மற்றும் உண்மையை பரப்ப...

வத்திக்கான் வானொலி, உலகில் மிக ஒதுக்குப்புறமான இடங்களுக்கும் தன் செய்தியைக் கொண்டுசெல்லும் அழகான சிறப்புப்பண்பைக் கொண்டுள்ளது என்றும், இக்காலத்தில், இந்த வானொலி, உருவப்படங்கள் மற்றும், எழுதப்பட்ட வார்த்தையோடும் உடன்பயணிக்கிறது என்றும், தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, வத்திக்கான் வானொலியின் பணியாளர்கள் உண்மையை பரப்ப உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

உலகத்திடம் பேசும்போது துணிவோடும், படைப்பாற்றலோடும் முன்னோக்கிச் செல்லுமாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியாக, நாம் உண்மையான காரியங்களைப் பார்ப்பதற்கு உதவும் சமூகத்தொடர்பை அமைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

வத்திக்கான் வானொலி, 1931ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதியன்று, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருத்தந்தையின் குரலை, இப்பூமியின் கடையெல்லைவரை எடுத்துச்செல்வதற்கென்று, வானொலி நிலையம் ஒன்றை அமைக்குமாறு, குலியெல்மோ (வில்லியம்) மார்க்கோனி அவர்களை, இத்திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

12 February 2021, 08:45