தேடுதல்

Vatican News
Focolare இயக்கத்தினர் சந்திப்பு Focolare இயக்கத்தினர் சந்திப்பு   (Vatican Media)

உரையாடல், திறந்தமனது வழியாக நற்செய்திக்கு சான்றுபகர..

Focolare இயக்கம், 180 நாடுகளில் 1,40,440த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மக்களுக்கு நெருக்கமாக இருப்பது, கடவுளின் வாழ்வுமுறை என்றும், உரையாடல், மற்றும், திறந்தமனது வழியாக நற்செய்திக்கு சான்றுபகருமாறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 06, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் தன்னை சந்திக்க வந்திருந்த, Focolare இயக்கத்தின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

Chiara Lubich அவர்கள் ஆரம்பித்த Focolare இயக்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட   ஏறத்தாழ 150 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, Chiara Lubich அவர்களின் மறைவுக்குப் பின்னுள்ள காலம், பிரச்சனைகளின் முக்கியத்துவம், ஆன்மீகத்தை காலத்திற்கேற்ற முறையில் வாழ்தல் ஆகிய மூன்று தலைப்புக்களில், தன் சிந்தனைகளை வழங்கினார்.

Focolare இயக்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Margaret Karram அவர்களுக்கு வாழ்த்தும், தலைவர் பணியிலிருந்து விலகும் Maria Voce அவர்களுக்கு நன்றியும் தெரிவித்த திருத்தந்தை, இந்த இயக்கத்தினர், மரியாவின் பணியை தொடர்ந்து ஆற்றுவதற்கு உதவியாக, சில வழிமுறைகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

Chiara Lubich அவர்கள், விண்ணகம் சென்று பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தின்படி வாழ்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, திறந்தமனது, உரையாடல் ஆகிய விழுமியங்களைக் கடைப்பிடித்தால், தன்னலத்தால் உருவாகும் தடைகளை அகற்றலாம் என்று கூறினார்.

இரண்டாவதாக, பிரச்சனைகளின் முக்கியத்துவம் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு பிரச்சனையும், புதியதொரு பக்குவநிலைக்கு நம்மை இட்டுச்செல்கின்றது என்றும், இன்னல்களை எதிர்கொள்ளும்போது, அவற்றிலிருந்து கிடைக்கும் நல்வாய்ப்புக்களைக் கண்டுகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

மூன்றாவதாக, இந்த இயக்கத்தினர் தங்களின் ஆன்மீகத்தை காலத்தின் சூழலுக்கேற்ப வாழுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, Lubich அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறும், அனைத்து உறுப்பினர்கள் மத்தியில், ஒருமையுணர்வு ஊக்குவிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார். 

Focolare இயக்கம், 180 நாடுகளில் 1,40,440த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த இயக்கம், "மரியாவின் பணி" என்ற தலைப்பில், 1990ம் ஆண்டில் ஓர் உலகளாவிய நம்பிக்கையாளரின் அமைப்பாக, திருத்தந்தையின் அங்கீகாரம் பெற்றது.  

06 February 2021, 15:35