தேடுதல்

Vatican News
"பெரு நாடு சுவாசிக்க" என்ற தலைப்பில் நடைபெறும் முயற்சிகளின் விளம்பரம் "பெரு நாடு சுவாசிக்க" என்ற தலைப்பில் நடைபெறும் முயற்சிகளின் விளம்பரம் 

"பெரு நாடு சுவாசிக்க" என்ற நடவடிக்கைக்கு வாழ்த்து

இறைமக்களுக்காகச் செபிப்பதையும், அவர்களுக்குப் பணியாற்றுவதையும் நிறுத்திவிடாமல் இருக்க வலியுறுத்தல் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றால் துன்புறும் மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுவதற்கென்று, பெரு நாட்டில் தொடங்கப்படும் புதிய நடவடிக்கை ஒன்றைப் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"பெரு நாடு சுவாசிக்க" என்ற தலைப்பில் தொடங்கப்படும் இந்நடவடிக்கையை ஊக்குவித்து, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும், த்ரூஹில்லோ பேராயருமான, Miguel Cabrejos அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் எவரும் கைவிடப்படக் கூடாது, மற்றும், தாங்கள் தனித்துவிடப்பட்டோம் என்று உணரக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்கு, மனிதமும், உடன்பிறந்த உணர்வும் கூடுதலாக இருக்கின்ற ஒரு சமுதாயத்தைக் நாம் கட்டியெழுப்பவேண்டும் என்று, திருத்தந்தை, தன் செய்தியில், கேட்டுக்கொண்டுள்ளார்.

இறைமக்களுக்காகச் செபிக்கவும், அவர்களுக்குப் பணியாற்றுவதை நிறுத்திவிடாமல் இருக்கவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் தனது ஆசிரையும் வழங்கியுள்ளார்.

பிப்ரவரி 20, இச்சனிக்கிழமையன்று துவக்கப்படும், "பெரு நாடு சுவாசிக்க" என்ற இந்நடவடிக்கையின் வழியாக, சுவாசக் கருவிகள் மற்றும், ஏனைய மருத்துவக் கருவிகள் சேகரிக்கப்பட்டு, கோவிட்-19 பெருந்தொற்றால் துன்புறும் மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

19 February 2021, 14:06