கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
நாத்சி வதைப்போர் முகாமில் சித்ரவதைகளை அனுபவித்து, கடந்த பல ஆண்டுகளாக உரோம் நகரில் வாழ்ந்துவரும் யூத மத எழுத்தாளர் ஒருவரை இம்மாதம் 20ம் தேதி சனிக்கிழமை மாலை நேரில் சென்று சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரில் வாழ்ந்து வரும் ஹங்கேரி நாட்டு யூத பெண் எழுத்தாளர், 89 வயதான Edith Bruck என்பவரை, அவரது இல்லத்தில் சென்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வெழுத்தாளரின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி நவிலவும், நாத்சி வதைப்போர் முகாம்களில் இறந்த மக்களுக்கு வணக்கம் செலுத்தவும் தான் வந்ததாகத் தெரிவித்தார்.
நாத்சி வதைப்போர் முகாமில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நாளையொட்டி, இவ்வாண்டு சனவரி 26ம் தேதி வத்திக்கான் நாளிதழ், ‘லொசர்வத்தோரே ரொமானோ’வுக்கு, நேர்முகம் ஒன்றை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமாகிய Edith Bruck அவர்கள் வழங்கியதை, திருத்தந்தை வாசித்ததைத் தொடர்ந்து, இவரை சந்திக்க திருத்தந்தை தன் ஆவலை வெளியிட்டதால், இதற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டது.
சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரம் 4 மணிக்கு, எழுத்தாளர் Edith Bruck அவர்களின் வீட்டிற்குச் சென்ற திருத்தந்தை, அவரின் சாட்சிய வாழ்வுக்கு நன்றியுரைத்ததோடு, நாத்சி வதைப்போர் முகாம்களில் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்காகவும், மனித குலத்தின் சார்பில் இறைவனிடம் மன்னிப்பை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.
திருத்தந்தைக்கும் Edith Bruck அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது.
தன் 13வது வயதிலேயே 1944ம் ஆண்டு நாத்சி வதைப்போர் முகாமில் தன் பெற்றோருடனும், இரண்டு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் அடைக்கப்பட்ட Edith Bruck அவர்கள், நாத்சி படை வீழ்ச்சிக்குப்பின் 1945ம் ஆண்டு விடுதலையடைந்தபோது, அம்முகாம்களிலேயே தன் பெற்றோரையும் ஒரு சகோதரரையும் இழந்திருந்தார்.
தான் அடைந்த துன்பங்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்,பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான Edith Bruck.