தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை - 210221 மூவேளை செப உரை - 210221 

தீமையை வெற்றி காணும் வழிமுறைகள்

இயேசுவைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் அவரைப்போல், வாழ்நாள் முழுவதும், தீயோனுக்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தவக்காலத்தின் நாற்பது நாட்களிலும் எவ்வாறு நாம் பலன்தரும் பாதையில் நடைபோடுவது என்பதை இறைவார்த்தை நமக்கு காண்பிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

பெருந்தொற்று நோய் கட்டுப்பாடுகள் காரணமாக, புனித பேதுரு வளாகத்தில், மிகக்குறைந்த எண்ணிக்கையில் மக்கள் குழுமியிருக்க, தன் நூலக சன்னல் வழியாக அவர்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பணிக்காலம் முழுவதும், தீமைக்கு எதிரான போராட்டமாகவே இருந்தது என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

இயேசு, தூய ஆவியாரால் பாலைநிலத்திற்கு வழிநடத்தப்பட்டு, நாற்பது நாட்கள் அங்கிருந்த வேளையில், தீய ஆவியால் சோதிக்கப்பட்டதை விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் (மாற் 1:12-15)  பற்றி தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவின் வாழ்வில் இடம்பெற்ற இந்நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இயேசுவின் பாலைநில சோதனை, இறைவன் நம் இதயத்தோடு பேசுவதையும், அதற்கு நாம் இறைவேண்டல் வழியாக பதிலுரைப்பதையும், வாழ்வில் நாம் சந்திக்கும்  சோதனைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியும், இறை ஆவியார் நம்மை தூண்டி வழிநடத்துவது குறித்தும் நமக்கு கற்பிக்கிறது, என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்,

தீயோனுடன் இயேசு மேற்கொண்ட போராட்டம், இறுதியில், பாடுகள், மற்றும் மரணத்தில் நிறைவுற்றது, என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வாழ்வு முழுவதும், இறை ஆவியாரால் வழிநடத்தப்பட்டவராக, நோயிலிருந்து குணமளித்தல், தீய ஆவியால் வதைப்பட்டோரை விடுவித்தல் என்று, தீமைக்கு எதிரான போராட்டமாக இருந்தது என்றார்.

இறைவன் மறுதலிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, மரணத்திற்கு தீர்ப்பிடப்பட்டபோது, தீயோனே வென்றதாக, அது தோற்றம் தந்தாலும், தீயோனை வெற்றிகண்டு, நம் அனைவரையும் தீயோனின் பிடியிலிருந்து விடுவித்ததே இறுதி வெற்றி என்றார் திருத்தந்தை.

இயேசுவைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் அவரைப்போல், வாழ்நாள் முழுவதும், தீயோனுக்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது, அவ்வேளையில் தீயோனுடன் எவ்வித உரையாடலுக்கும் ஊக்கமளிக்காமல், இயேசுவைப்போல் அவனை நாம் ஒதுக்கி வைக்கவேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எதிரியாகிய தீயோனை வெற்றிகாண்பதற்கு உதவும், விசுவாசம், இறைவேண்டல், ஒறுத்தல்  ஆகியவைக்குரிய பலத்தை இறைவனின் அருள் நமக்கு வழங்குகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் அடிச்சுவடுகளில் நாம் நடைபயின்று, நம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்து, வெறுமையான வாக்குறுதிகளை வழங்கும் தீயோனை மறுதலித்து நம் வாழ்வில் நடைபோடவேண்டும் எனவும், அன்னைமரியின் பரிந்துரை இதில் நமக்கு உதவும் எனவும் எடுத்துரைத்தார்.

21 February 2021, 13:05