தேடுதல்

Vatican News
பன்னாட்டு தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை பன்னாட்டு தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை  (Vatican Media)

தன்னலம் குறித்த விளக்க ஒளியை தந்த பெருந்தொற்று

கொரோனா பெருந்தொற்று காலம், உடலளவில் நம் ஒவ்வொருவரையும் சிறிது தூரமாக விலக்கி வைத்துள்ளபோதிலும், விரைவில் இந்நிலைகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானிற்கான அரசுகளின் தூதர்களுடன், ஜனவரி மாதம் 25ம் தேதி இடம்பெறுவதாக இருந்த திருத்தந்தையின் புத்தாண்டு சந்திப்பு, பிப்ரவரி 8, இத்திங்கள்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது குறித்த தன் மன்னிப்பை முதலில் வேண்டி, பன்னாட்டு அரசுகளின் தூதுர்களுடன், பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த கொரோனா பெருந்தொற்று காலம், உடலளவில் நம் ஒவ்வொருவரையும் சிறிது தூரமாக விலக்கி வைத்துள்ளபோதிலும், விரைவில் இந்நிலைகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் மாதம் முதல் வாரத்தில், தான் ஈராக் நாட்டில் திருத்தூதுப் பயணத்தை துவக்க உள்ளதைக் குறித்து எடுத்துரைத்தார்.

நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையில் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் திருப்பீடம் வழங்கும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் தன்னுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மைக் காலங்களில் காங்கோ குடியரசு, புர்கினோ பாசோ நாடு, ஆஸ்திரியா ஆகியவைகளுடன் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம், சீனாவில் ஆயர்களை நியமிக்கும் ஒப்பந்தம் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது போன்றவைகளை சுட்டிக்காட்டினார்.

அச்சத்தையும் உயிரிழப்புக்களையும் தந்துள்ள அண்மைய பெருந்தொற்றினால், உலக தட்ப வெப்ப நிலை, உணவு, பொருளாதாரம், மற்றும், குடிபெயர்தல் போன்றவைகளிலும் பலவித தாக்கங்கள் உணரப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ள திருப்பீடம், ‘வத்திக்கான் கோவிட்-19 அமைப்பு’ ஒன்றை உருவாக்கியுள்ளதையும் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னலம், மற்றும், தூக்கியெறியும் கலாச்சாரம் குறித்த விளக்க ஒளியை இந்த பெருந்தொற்று நமக்கு தந்துள்ளது எனக்கூறியத் திருத்தந்தை, அதே பாதையில் நாம் தொடர்வதா அல்லது, புதிய பாதையை தேர்ந்துகொள்வதா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய காலமிது என வத்திகானுக்கான அரசுத் தூதர்களிடம் கூறினார்.

இந்த தொற்றுநோய் உருவாக்கியுள்ள நலநெருக்கடி பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தில் பலவீனமானவர்கள் உட்பட, அனைவருக்கும் தேவைப்படும் நல ஆதரவுப்பணிகள் நிறைவுச் செய்யப்படவேண்டும் என விண்ணப்பித்தார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள், தட்ப வெப்ப நிலை மாற்றங்கள், இவ்வுலகின் கடற்கரையோர சிறிய நாடுகளுக்கு இருக்கும் ஆபத்துக்கள் குறித்தும் தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக வியட்நாம், பிலிப்பீன்ஸ் ஆகியவைகளில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்குகள், ஆஸ்திரேலியா, மற்றும், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற காட்டுத்தீ போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார்.

ஆப்ரிக்க கண்டத்திலும், தட்பவெப்பநிலை மாற்றம், மற்றும், பெருந்தொற்று நோய் காரணமாக பல நாடுகள், குறிப்பாக, புர்கினோ பாசோ, மாலி, நிஜர், தென்சூடான் ஆகியவை உணவு நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கோவிட்  பெருந்தொற்று காரணமாக பல நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள  கட்டுப்பாடுகளால், சிறு தொழில்கள், வேலைவாய்ப்புகள், குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஏமன், சிரியா ஆகிய நாடுகளில் சிறார் பெருமெண்ணிக்கையில் ஊட்டச்சத்தின்றி வாடுவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

ஏழை நாடுகளின் கடன் மன்னிப்பு, புகலிடம் தேடுவோர் வரவேற்கப்படுதல், ஜனநாயகத்தை பேணிக்காத்தல், சிரியாவிலும் லெபனானிலும் அமைதி திரும்புதல், பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோர் குறித்த அக்கறை, புனித பூமி, மற்றும், லிபியாவில் அமைதி,  மத்திய ஆப்ரிக்க குடியரசு, கொரிய தீபகற்பம், இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றின் பதட்ட நிலைகளைக் களைதல், கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்துவரும் பயங்கரவாதங்களின் எண்ணிக்கை, மத சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியதன் அவசியம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தன் கருத்துக்களை அரசுத் தூதர்களுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்போது, உலகின் 183 நாட்கள், திருப்பீடத்துடன் அரசியல் உறவைக் கொண்டுள்ளன.

08 February 2021, 15:01