தேடுதல்

Vatican News
பிரேசில் நாட்டில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சுவர் ஓவியம் பிரேசில் நாட்டில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சுவர் ஓவியம்  (AFP or licensors)

பிரேசில் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தையின் செய்தி

கிறிஸ்தவ ஒன்றிப்பின் வழியே நாம் இவ்வுலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், நம்பிக்கை தரும் அடையாளமாகவும் இருக்கமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து, வாழ்வைக் காப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் இணைந்து வரவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு கிறிஸ்தவர்களுக்கு அனுப்பிய தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார்.

பிரேசில் கத்தோலிக்க ஆயர் பேரவையும், கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவையும் இணைந்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு உடன்பிறந்த நிலை கொள்கைப் பரப்பு முயற்சியை பிப்ரவரி 17 திருநீற்றுப் புதனன்று துவங்கியுள்ளதையடுத்து, இந்த முயற்சியைப் பாராட்டி திருத்தந்தை செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

பிரேசில் கத்தோலிக்க ஆயர் பேரவை, ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தில் நடத்திவரும் உடன்பிறந்த நிலை கொள்கைப்பரப்பு முயற்சியை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஏனைய கிறிஸ்தவர்களோடு இணைந்து மேற்கொள்கிறது.

இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு உடன்பிறந்த நிலை கொள்கைப் பரப்பு முயற்சிக்கு, "கிறிஸ்துவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்" (எபேசியர் 2:14) என்ற விவிலிய மேற்கோளும், "உடன்பிறந்த நிலையும் உரையாடலும்: அன்பின் அர்ப்பணிப்பு" என்ற தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் தவக்காலத்தில், உலகை, குறிப்பாக, பிரேசில் நாட்டை இன்னும் வெகுவாக சூழ்ந்திருக்கும் பெருந்தொற்றின் நெருக்கடியைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெருந்தொற்றின் காரணமாக உயிரிழந்தோர், மற்றும் உயிர்களைக் காப்பதற்காகப் போராடிவரும் நலப்பணியாளர்கள் ஆகியோருக்காக சிறப்பான முறையில் இறைவேண்டல் செய்யுமாறும், நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நல்ல சமாரியரைப்போல், நம் அயலவரின் உடல்நலத்தையும், நமது உடல்நலத்தையும் பேணிக்காக்குமாறும் திருத்தந்தை இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பின் வழியே நாம் இவ்வுலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், நம்பிக்கை தரும் அடையாளமாகவும் இருக்கமுடியும் என்பதை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் ஐயத்தையும், அச்சத்தையும் களைந்து, ஒன்றிப்பு  முயற்சிகளை மேற்கொள்வோமாக என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகைய ஒன்றிப்பின் அடிப்படையில், நாம் உலகளாவிய உடன்பிறந்த நிலையையும், அமைதியையும் இவ்வுலகில் வளர்க்க முடியும் என்றும், இத்தகைய ஒன்றிப்பே, இந்தப் பெருந்தொற்றினை தோல்வியுறச் செய்யும் சிறந்த வழி என்றும் திருத்தந்தை, பிரேசில் கிறிஸ்தவர்களுக்கு அனுப்பிய தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார்.

18 February 2021, 14:19