தேடுதல்

Vatican News
அருள்சகோதரி Nathalie Becquart, அருள்பணி Luis Marín de San Martín அருள்சகோதரி Nathalie Becquart, அருள்பணி Luis Marín de San Martín  

உலக ஆயர்கள் மாமன்றத்தின் நேரடி பொதுச்செயலராக பெண் ஒருவர்

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம், பல்வேறு உலக ஆயர்கள் மாமன்றங்களுக்கு இடையே உறவுகளின் பாலமாக, மாமன்றத்தின் பணிகளுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள, ஒரு நிரந்தர அமைப்பாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அருள்சகோதரி Nathalie Becquart, அருள்பணி Luis Marín de San Martín ஆகிய இருவரையும், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலகத்திற்கு, நேரடி பொதுச்செயலர்களாக, பிப்ரவரி 06, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்சகோதரி Nathalie Becquart அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தில், நேரடி பொதுச்செயலர் பணிக்கு, முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ள பெண் ஆவார்.

அருள்சகோதரி Nathalie Becquar

1969ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில், Fontainebleau என்ற ஊரில் பிறந்த அருள்சகோதரி Nathalie Becquart அவர்கள், மேலாண்மை கல்வியில், சிறப்பாக, தொழில்முனைவோர் பற்றிய கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பவர். பாரிஸ் மாநகரில், Sorbonne பல்கலைக்கழகத்தில் மெய்யியல் கல்வியையும், லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இறையியல் கல்வியையும் முடித்துள்ள இவர், பெய்ருட்டில், 1992 மற்றும், 1993ம் ஆண்டில், தன்னார்வலராக பணியாற்றியிருப்பவர். 

இச்சகோதரி, 1995ம் ஆண்டில், இயேசு கிறிஸ்துவின் மறைப்பணியாளர்கள் எனப்படும் சவேரியார் அருள்சகோதரிகள் (புனித இஞ்ஞாசியார் ஆன்மீகத்தின் திருத்தூது சபை) சபையில் இணைந்து, 2005ம் ஆண்டில் அச்சபையில் நிரந்தர உறுப்பினரானார். பிரான்சில் இஞ்ஞாசியார் இளையோர் அமைப்பில் ஆன்மீக இயக்குனர் உட்பட, இளையோர் மத்தியில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ள இவர், 2016-2018ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், வத்திக்கானில் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்பு குழுவில் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில் Auditor ஆகவும், அருள்சகோதரி நத்தலி அவர்கள் பங்குபெற்றுள்ளார்.

அருள்பணி Luis Marín de San Martín

அருள்பணி Luis Marín de San Martín அவர்கள், 1961ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் பிறந்தவர். புனித அகுஸ்தீனார் சபையைச் சேர்ந்த இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலும், மத்ரித் பாப்பிறை Comillas பல்கலைக்கழகத்திலும் கோட்பாட்டு இறையியல், மற்றும், இறையியலில் முனைவர் பட்டங்களைப் பெற்றிருப்பவர். புனித அகுஸ்தீன் சபையில் பல்வேறு முக்கிய பணிகளை ஆற்றியுள்ள இவர், 2013ம் ஆண்டிலிருந்து, அச்சபையின் உதவி பொதுத் தலைவராகவும், அகுஸ்தீன் ஆன்மீக நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம்

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம், பல்வேறு உலக ஆயர்கள் மாமன்றங்களுக்கு இடையே உறவுகளின் பாலமாக, மாமன்றத்தின் பணிகளுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள, ஒரு நிரந்தர அமைப்பாகும். 

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத் தந்தையர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த செயலகத்தை, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டில் உருவாக்கினார். பொதுச்சங்க அனுபவத்தால் உருவான ஒருமையுணர்வை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் நோக்கத்தில், இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த பொதுச் செயலகத்தின் தலைவராக, கர்தினால் மாரியோ கிரெக் (Mario Grech) அவர்கள் பணியாற்றி வருகிறார்.

06 February 2021, 15:42