தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

புறணி பேசாமல், நகைச்சுவை உணர்வுடன் வாழ...

புறணி பேசும் பழக்கத்தை வெல்வதற்கு, நாம் நம் நாவுகளைக் கடித்துக்கொண்டாலும் பரவாயில்லை, ஏனெனில், அவ்வண்ணம், நாம், காயப்பட்ட நாவை, புறணி பேசுவதற்குப் பயன்படுத்தமாட்டோம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 2, இச்செவ்வாயன்று, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், இருபால் துறவியர், மிகக்குறைவான எண்ணிக்கையில் பங்கேற்ற திருப்பலியை, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில், கூடியிருந்த துறவியரிடம், தன் உள்ளத்திலிருந்து எழுந்த சில எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இவ்வுலகில், துறவியரின் எண்ணிக்கை மிகக் குறைவானது என்றாலும், இந்தக் கோவிட் பெருந்தொற்று நம்மை ஒரு மூலையில் முடக்கிப்போட்டாலும், பொறுமையுடன் நாம், ஏனைய மனிதருக்கு நம் வாழ்வை வழங்கிவருகிறோம் என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

திருப்பலியில் கலந்துகொண்ட துறவியரிடம், புறணி பேசாமல் இருப்பது, மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பது என்ற இரு அம்சங்களைப்பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான வேண்டுகோள்களை விடுத்தார்.

புறணி பேசுவது ஒரு குழுமத்தைக் கொல்லும் நஞ்சு என்றும், இந்த பழக்கத்தை வெல்வதற்கு, நாம் நம் நாவுகளைக் கடித்துக்கொண்டாலும் பரவாயில்லை, ஏனெனில், அவ்வண்ணம், நாம், காயப்பட்ட நாவை, புறணி பேசுவதற்குப் பயன்படுத்தமாட்டோம் என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நாம் மேற்கொண்டுள்ள துறவு வாழ்வில் நமக்குப் பிடிக்காத பல விடயங்கள் ஒவ்வொரு நாளும் நிகழும் என்பதை தன் இறுதி உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன், அந்த விடயங்களை சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொருவரும், நம்மைப்பற்றியும், சூழ நிகழும் பலவற்றைக் குறித்தும், மனம்விட்டு, வாய்விட்டு சிரிக்கப் பழகிக்கொண்டால், புறணி பேசுவதும் நம் குழுமங்களில் குறைந்துவிடும் என்று திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2021, 16:05