தேடுதல்

Vatican News
மியான்மார் திருப்பயணத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 28.11.2017 மியான்மார் திருப்பயணத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 28.11.2017 

திருத்தந்தையின் இதயத்திற்கு நெருக்கமாக உள்ள மியான்மார்

திருத்தந்தை : மியான்மாரின் அரசுப் பொறுப்பிலுள்ளோர் அனைவரும், பொதுநலனுக்கு உழைப்பதில், உண்மையான விருப்பத்துடன செயல்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இம்மாத துவக்கத்தில் இருந்து இராணுவ ஆடசியின் கீழ் வலுக்கட்டாயமாக கொணரப்பட்டிருக்கும் மியான்மார் நாட்டு மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும், நாட்டை ஆள்வோர் பொதுநலனைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மியான்மார் நாட்டின் அண்மைய அரசியல் சூழல்கள் குறித்து தன் ஆழ்ந்த அக்கறையை, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, அந்நாட்டில், தான் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதிலிருந்து, அந்நாடு தன் இதயத்திற்கு மிக நெருக்கமாக  உள்ளது என்று கூறினார்.

மியான்மாரின் இன்றைய இக்கட்டானச் சூழலில், அந்நாட்டு மக்களுடன் ஆன்மீக நெருக்கத்தையும், இறைவேண்டலையும், ஒருமைப்பாட்டையும் வெளியிடுவதாக தெரிவித்த திருத்தந்தை, அந்நாட்டின் அரசுப் பொறுப்பிலுள்ளோர் அனைவரும், பொதுநலனுக்கு உழைப்பதிலும், சமுதாய  நீதியையும், சமுதாய நிலையான தன்மையையும் ஊக்குவிப்பதிலும், உண்மையான விருப்பத்துடன செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இம்மாதம் முதல் தேதி ஆட்சியை கவிழ்த்த இராணுவம், இதுவரை 160க்கும் மேற்பட்ட அரசியல், மற்றும் சமுதாய, நடவடிக்கையாளர்களைக் கைது செய்துள்ளது.

இராணுவ ஆட்சியை எதிர்த்து, மியான்மார் முழுவதும் இஞ்ஞாயிறன்று, பல ஆயிரக்கணக்கானோர் அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

07 February 2021, 13:06