தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வி உரை 100221 புதன் மறைக்கல்வி உரை 100221  (Vatican Media)

வட இந்திய மக்களுக்காக திருத்தந்தையின் செபம்

உத்தரகண்ட் மாநில வெள்ளம், நிலவு புதிய ஆணடு, ஆகிய இரு கருத்துக்களையும் நினைவுகூர்ந்து திருத்த்ந்தை தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் செபித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து விழுந்ததில் உருவான வெள்ளம், இரு மின் நிலையங்களின் பணியாளர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 10, இப்புதனன்று தன் அனுதாபங்களையும் இறைவேண்டல்களையும் தெரிவித்தார்.

திருத்தந்தையர் இல்ல நூலகத்திலிருந்து புதன் மறைக்கல்வி உரையை நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், வடஇந்தியாவில், மூன்று நாள்களுக்கு முன்னர், பனிப்பாறை உடைந்ததால் உருவான வெள்ளம் ஏற்படுத்திய அழிவினால் பாதிக்கப்பட்ட அனைவரோடும் நான் உள்ளத்தால் நெருங்கியிருக்கிறேன் என்று கூறினார்.

இந்த இயற்கைப் பேரிடரால் இரு மின்சக்தி நிலையங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், உயிரிழந்துள்ளனர் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்தோருக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் தான் இறைவேண்டல் செய்வதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் தான் உள்ளத்தால் ஒன்றித்திருப்பதாகவும் கூறினார்.

இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 170க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. அங்குள்ள நீர்மின்நிலையத்தில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதையில் பணியாளர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியும், தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று, நிலவு புதிய ஆண்டைச் சிறப்பிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, இந்த புதிய ஆண்டு, அனைத்து மக்களையும் உடன்பிறந்த உணர்வில் ஒருங்கிணைக்க தான் வாழ்த்துவதாகக் கூறினார்.

உலகளாவிய இந்த பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகள், நம் உடல் நலத்தையும், மனநலத்தையும் மட்டும் பாதிக்கவில்லை, மாறாக, நம் சமுதாய நலனையும் பாதித்துள்ளது என்று கூறிய திருத்தந்தை, நிலவின் புதிய ஆண்டைக் கொண்டாடும் வேளையில், அனைவரும் அமைதி நிறைந்த வாழ்வை அனுபவிக்க தான் வாழ்த்துவதாகக் கூறினார்.

இவ்விரு விண்ணப்பங்களையும் தொடர்ந்து, எல்லா மனிதருக்கும், குறிப்பாக, மிகவும் நலிந்தோரும் வறியோரும் அமைதி, மற்றும் அனைத்து நலன்களை அடைய இறைவேண்டல் செய்வோம் என்று கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.

இதற்கிடையே, பிப்ரவரி 9, இச்செவ்வாயன்று, 'இன்னும் பாதுகாப்பான இணையதள நாள்' சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், @pontifex என்ற தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டார்.

"அனைவரும், நாம் மேற்கொள்ளும் தொடர்புகளுக்கும், பகிர்ந்துகொள்ளும் தகவல்களுக்கும், பொய்யான செய்திகளை வெளிப்படுத்துவதற்கும் பொறுப்பாளர்கள். நாம் அனைவரும் உண்மையின் சாட்சிகள்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் பதிவாக திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.

ஒவ்வோர் ஆண்டும், இரண்டாம் மாதத்தின் இரண்டாம் வாரத்தின் இரண்டாம் நாள், 'இன்னும் பாதுகாப்பான இணையதள நாள்' சிறப்பிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டு முதல் சிறப்பிக்கப்படும் இந்த உலக நாள், இவ்வாண்டு 18வது முறையாக சிறப்பிக்கப்பட்ட வேளையில், "இன்னும் சிறந்த இணையத்தளத்திற்காக இணைந்து வர" என்பது மையக்கருத்தாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

10 February 2021, 15:21