தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூவேளை செபவுரை - 070221 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூவேளை செபவுரை - 070221  (© Vatican Media)

துயருறும் மக்கள் குறித்து இயேசுவின் தனி அக்கறை

நாமும் இயேசுவால் குணப்படுத்தப்பட அனுமதிப்போம், அதன் வழியாக, இயேசுவின் கனிவான குணப்படுத்தலுக்கு நாமும் சான்றுகளாகச் செயல்படுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

துயருறும் மக்கள் குறித்து, தன் பணிக்காலத்தின் துவக்கத்திலிருந்தே, அதிக அக்கறை காட்டி வந்தார் இயேசு, அதுபோல், நோயுற்றோர் மீது அக்கறை கொண்டு செயல்படுவது, திருஅவையின் மேய்ப்புப் பணியில் ஒருங்கிணைந்த பகுதியாகும் என இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகள், இத்தாலியில், கடந்த திங்கள்கிழமையிலிருந்து ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் தன் பாப்பிறை இல்லத்தின் மேல்மாடி சன்னல் வழியாக புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோருக்கு நண்பகல் மூவேளை செப உரையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.

பிப்ரவரி 7, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், இயேசு, பேதுருவின் மாமியாரை குணப்படுத்தியது, மற்றும், கப்பர்நாகூமில் பலர் இயேசுவால் குணம்பெற்றது ஆகியவற்றைக் குறித்துப் பேசும் நற்செய்தி வாசகத்தை (மாற் 1:29-39) மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தையின் மூவேளை செப உரையை நேரடியாக செவிமடுக்க, நூற்றுக்கும் சிறிது அதிகமானோர், முகக் கவசங்களுடன் இடைவெளிவிட்டு புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருக்க, திருத்தந்தை வழங்கிய உரை, நாமும் இயேசுவால் குணப்படுத்தப்பட அனுமதிப்போம், அதன் வழியாக, இயேசுவின் கனிவான குணப்படுத்தலுக்கு நாமும் சான்றுகளாச் செயல்படுவோம், என்ற விண்ணப்பத்தை முன்வைத்தது.

தன் பணிக்காலத்தில் ஆற்றிய புதுமைகளை காணும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் தன் சீடர்கள் இருப்பதை விரும்பாத இயேசு, அவர்களுக்கும், குணப்படுத்துதல், மற்றும், பேயோட்டுதல் ஆகிய அதிகாரங்களை வழங்கி, வேறு ஊர்களுக்கு அனுப்பி வைத்ததையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து நோயுற்றோர் மீதும் அக்கறை கொண்டு செயலாற்றுவது, இறைவனின் கனிவை, துயருறும் மனித குலத்திற்கு கொணரும் ஒருங்கிணைந்த பணியாகும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு முதல் வாசகமான, யோபு நூலின் பகுதியை சட்டிக்காட்டி, மனிதர்கள் அடையும் துன்பங்களைக் குறித்து யோபு எழுப்பும் கேள்விக்கு, இயேசு அருகிலிருந்து கனிவுடனும், கருணையுடனும் பதில் தருகிறார் என்று கூறினார்.

இறைவனோடு கூடிய நெருங்கிய உறவில் இயேசுவின் கருணை தன் ஆழமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது எனக் கூறிய திருத்தந்தை, இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார் (மாற் 1:35), என்ற ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகப் பகுதியை சுட்டிக்காட்டினார்.

07 February 2021, 12:58