தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செபவுரை - 140221 திருத்தந்தையின் மூவேளை செபவுரை - 140221  (ANSA)

மற்றவர்களின் காயங்களைப் பகிரும் இயேசுவின் எடுத்துக்காட்டு

திருத்தந்தை : துயருறுவாரை நெருங்கிச் செல்வதில் இருக்கும், தன்னலங்களையும், அச்சங்களையும், கணக்குப் பார்த்தலையும் தாண்டிச் சென்று செயல்படுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

முற்சார்பு எண்ணங்களையும், மற்றவர் வாழ்வில் உதவுவது குறித்து எழும் அச்சங்களையும் கைவிட்டு, மற்றவர்களின் காயங்களை பகிர்ந்து, அவர்களுக்கு குணமளிக்கும் இயேசுவின் எடுத்துக்காட்டை நாமும் பின்பற்றுவோம் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரவரி 14ம் தேதி, இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான்  புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு அந்நாளின் நற்செய்தி வாசகம் (மாற்கு 1:40-45), குறித்து, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குணம்பெற தன்னை அணுகிவந்த தொழுநோயாளரை நெருங்கி அவரைத் தொட்டு இயேசு குணப்படுத்தியதுபோல், நம் வாழ்விலும் இயேசு அனைத்துத் தடைகளையும் தாண்டிவந்து நமமைத் தொட்டு, நம் வாழ்வைக் குணப்படுத்துகிறார் என்று கூறினார்.

தொழுநோயாளர்கள் மனித குலத்தோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற சட்டங்கள் இருந்த அந்தக் காலத்தில், தொழுநோயாளரைத் தன்னிடம் நெருங்கவிட்டதோடு, இயேசு, அவரைத் தொட்டு குணப்பத்துகிறார் என்பது, தன் கருணையால் தூண்டப்பட்டு இறைவன் நம் அருகில் வந்து நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைக்கிறார் என, தான் அறிவித்த நற்செய்தியின் எடுத்துக்காட்டாக அவரே உள்ளார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தொழுநோய் என்பது, கடவுளின் தண்டனை என எண்ணப்பட்டுவந்த காலத்தில், தன் நோய் குறித்த தடைகளையும் தாண்டி, இயேசுவிடம் அத்தொழுநோயாளர் நெருங்கிவந்தது, இயேசுவை, தண்டிக்கும் கடவுளாக அல்ல, மாறாக, கருணையின் கடவுளாக அவர் கண்டதை நமக்கு உணர்த்துகிறது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தன் துயர்களைப் பகிரும் கடவுளாக இயேசுவைக் கண்டுகொண்டு, தடைகளை மீறி அவரை தொழுநோயாளர் நெருங்க, இயேசுவும் சட்ட விதிகளை மீறி, அவரைத் தொடுவதைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார்த்தையால் மட்டுமல்ல, அவரை நெருங்கித் தொட்டு அவருடன் மனித உறவை ஏற்படுத்தி, அவரின் காயங்களையும் பகிர்ந்து கொள்கிறார் இயேசு என்றுரைத்தார்.

இறைவனோடும், நமக்கு அடுத்திருப்பவர்களோடும் உறவை வளர்ப்பதில், நமக்கு இருக்கும் அனைத்துத் தடைகளையும் தாண்டிச் செல்லவேண்டும் என்பதை கற்றுத்தரும் இயேசு, நமக்கு நெருக்கமானவராகவும், கருணையுடையவராகவும் மட்டுமல்ல, அனைத்துத் தடைகளையும் தாண்டிவருபவராகவும் உள்ளார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையில் கூறினார்.

இன்றைய சமுதாயத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களாக வாழும் மக்களை நோக்கிச் செல்வதில் இருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து அவர்களின் வாழ்வு மேம்பாட்டில் நம்மையும் ஈடுபடுத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயருறுவாரை நெருங்கிச் செல்வதில் இருக்கும் தன்னலங்களையும், அச்சங்களையும், கணக்குப் பார்த்தலையும் தாண்டிச்சென்று இயேசுவைப் போலவும், அந்த தொழுநோயாளரைப் போலவும் நாம் செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார். 

14 February 2021, 12:56