தேடுதல்

கொலம்பியாவில் புலம்பெயர்ந்துள்ள வெனிசுவேலா நாட்டினர் கொலம்பியாவில் புலம்பெயர்ந்துள்ள வெனிசுவேலா நாட்டினர் 

புலம்பெயர்ந்தோரிடையே ஆற்றும் பணிகளுக்கு நன்றி

திருத்தந்தை: தன் நாட்டிலேயே பொருளாதார, மற்றும், ஏழ்மை பிரச்சனைகள் இருப்பினும், கொலம்பியா நாடு, புலம்பெயர்ந்தோருக்கு உதவுவது, பாராட்டுக்குரியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோருக்காக ஆற்றப்படும் அனைத்துப் பணிகளையும் நன்றியுணர்வுடன் எப்போதும் நோக்குவதாகவும், அவர்களுக்கு பணியாற்றுவோருக்கு தன் நன்றியை வெளியிடுவதாகவும் இஞ்ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொலம்பியாவில் அண்மைக் காலத்தில் புகலிடம் தேடியுள்ள பத்து இலட்சத்திற்கும் மேலான வெனிசுவேலா நாட்டு புலம்பெயர்த்தோருக்கு சட்டரீதியான தற்காலிக புகலிடம் வழங்க கொலம்பிய அரசு கடந்தவாரம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசுக்கு தன் நன்றியை வெளியிடுவதாக திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பொருளாதார, மற்றும், ஏழ்மை பிரச்சனைகள் தன் நாட்டிலேயே இருப்பினும், 70 ஆண்டுகளாக, கெரில்லா போரின் துயர்களை அந்நாடு சந்தித்திருப்பினும், கொலம்பியா நாடு, இந்த பிறரன்பு செயலுக்கு முன்வந்துள்ளது, பாராட்டுக்குரியது என்றார் திருத்தந்தை.

மேலும், ஸ்லாவ் இன மக்களுக்கு நற்செய்தியைக் கொணர்ந்த புனிதர்கள் சிறில்,மற்றும், மெத்தோடியஸ் அவர்களின் திருவிழா இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பாவின் இணை பாதுகாவலர்களான இப்புனிதர்களால் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்து, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பிற்கு இப்புனிதர்களின் பரிந்துரை உதவுவதாக என்ற ஆவலையும் வெளியிட்டார்.

வரும் புதனன்று, பிப்ரவரி 17ம் தேதியன்று திருநீற்றுப் புதனுடன் துவங்கும் தவக்காலம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இன்று சந்தித்துவரும் நெருக்கடிக் காலம் நமக்கு விசுவாசம் மற்றும் நம்பிக்கையைக் கொணரும் சிறந்த காலம் என்று கூறினார்.

இஞ்ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும், நெருக்கம், கருணை, மற்றும், கனிவு குறித்து நினைவுகூர்ந்தவர்களாக, இந்த தவக்காலத்தில் செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2021, 13:02