தேடுதல்

மார்ச் 5 முதல் 8 வரை - திருத்தந்தையின் ஈராக் நாட்டு திருத்தூதுப் பயணம் மார்ச் 5 முதல் 8 வரை - திருத்தந்தையின் ஈராக் நாட்டு திருத்தூதுப் பயணம் 

ஈராக் நாட்டு திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்கள்

மார்ச் மாதம் 5 முதல் 8ம் தேதி வரை, ஈராக் நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணத்தின் விவரங்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்களை, பிப்ரவரி 8, இத்திங்களன்று காலையில் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

மார்ச் 5ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, காலை உரோம் Fiumicino விமானத்தளத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, அன்று பிற்பகலில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தை சென்றடைந்து, அதே நாளில் அரசுத்தலைவர் மாளிகைச் சென்று, அரசு, மற்றும் அரசியல் தலைவர்களை சந்திப்பதுடன், அன்று மாலையே, தலத்திருஅவை ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், குருத்துவப் பயிற்சி மாணவர்கள் ஆகியோரை, 'மீட்பின் அன்னை' ஆலயத்தில் சந்தித்து உரை வழங்குவார்.

சனிக்கிழமை, 6ம் தேதியன்று, Najaf நகருக்குச் செல்லும் திருத்தந்தை, அங்கு, இஸ்லாமிய மதத் தலைமைக்குருவை சந்தித்தபின், பல்சமய உரையாடல் கூட்டத்திலும் கலந்துகொள்வார். அன்று மாலை பாக்தாத் நகர் திரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்தேய வழிபாட்டுமுறை 'புனித யோசேப்பு' கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையும் வழங்குவார்.

ஏழாம் தேதி ஞாயிறன்று, எர்பில் நகருக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொண்டு, அங்கு விமான நிலையத்திலேயே மத, மற்றும், அரசுத்தலைவர்களின் வரவேற்பை பெற்றபின், மோசூல் நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டு, போரால் பலியானவர்களுக்கு இறைவேண்டல் நடத்தி, Qaraqosh நகரில், நண்பகல் மூவேளை செப உரை வழங்குவார்.

மீண்டும் எர்பில் நகர் திரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Franso Hariri அரங்கில் இத்திருத்தூதுப் பயணத்தின் இறுதி திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை வழங்குவார்.

ஞாயிறு மாலை பாக்தாத் நகர் திரும்பும் திருத்தந்தை, 8ம் தேதி, திங்கள்கிழமையன்று காலை ஈராக் நாட்டிலிருந்து விடைபெற்று உரோம் நகர் திரும்புவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2021, 15:14