தேடுதல்

அபு தாபியில், அல் அசார் உயர் குரு அகமத் அல்-தய்யெப், திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் அபு தாபியில், அல் அசார் உயர் குரு அகமத் அல்-தய்யெப், திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள் விண்ணப்பம்

மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள் முதல் முறையாக சிறப்பிக்கப்படும் வேளையில், இந்த நாள் நிகழ்வுகளில், உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இணைவது குறித்து பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 4, இவ்வியாழனன்று, மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள் முதல் முறையாக சிறப்பிக்கப்படும் வேளையில், இந்த நாள் நிகழ்வுகளில், உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இணைவது குறித்து தான் பெரு மகிழ்ச்சி கொள்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதியன்று, அபு தாபியில், அல் அசார் உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும், தானும் இணைந்து, 'உலக அமைதிக்காகவும், இணைந்து வாழ்வதற்காகவும் மனித உடன்பிறந்த நிலை' என்ற அறிக்கையில் கையெழுத்திட்டத்தை நினைவுகூரும் வண்ணம் இந்த நாளை, ஐ.நா. நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பதை, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

பல்சமய மற்றும் பன்முகக் கலாச்சார உரையாடலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறப்பிக்கப்படும் இந்த அனைத்துலக நாளில், அல் அசார் உயர் குரு, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் ஆகியோருடன் தானும் கணணி வழி, மெய் நிகர் கருத்தரங்கில்  கலந்துகொள்ளப்போவதாக திருத்தந்தை அறிவித்தார்.

இந்த உலக நாளைக் குறித்த தீர்மானத்தை ஐ.நா. பொது அவை நிறைவேற்றிய வேளையில், மனித இனம் கொண்டிருக்கும் பொதுவான நன்னெறி விழுமியங்களைப் புரிந்துகொள்வதற்கு, பல்சமய உரையாடல் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஐ.நா. நிறுவனத்தின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள கருத்தை, நாம், இந்த உலக நாளன்றும், இனி வரும் நாள்களிலும், நம் இறைவேண்டலாக மேற்கொள்வோம், என்ற சொற்களுடன், திருத்தந்தை, தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2021, 12:40