தேடுதல்

இறை இரக்கத்தின் ஆண்டவரை காட்சியாக கண்ட புனித Faustina Kowalska திருத்தலம் இறை இரக்கத்தின் ஆண்டவரை காட்சியாக கண்ட புனித Faustina Kowalska திருத்தலம் 

90ம் ஆண்டு நிறைவைக் காணும் இறைஇரக்கத்தின் காட்சி

திருத்தந்தை : கருணையெனும் கொடைக்காக இயேசுவை நோக்கி வேண்டுவதோடு, அவர் நம்மை அரவணைக்கவும், நம்மில் ஊடுருவவும் அனுமதிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

போலந்தின் Płock நகரில், அருள்சகோதரி புனித Faustina Kowalska அவர்களுக்கு, இறைவன் காட்சியளித்ததன் 90ம் ஆண்டு நிறைவு, பிப்ரவரி 22, இத்திங்கள் கிழமையன்று நிறைவுற்றதையொட்டி, அம்மறைமாவட்ட ஆயருக்கும், விசுவாசிகளுக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி இறைவன் காட்சியளித்ததன் 90ம் ஆண்டு நிறைவையொட்டி, Płock மறைமாவட்ட ஆயர் Piotr Libera அவர்களுக்கும், விசுவாசிகளுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், புனிதர் Faustina Kowalska அவர்களுக்கு இறைவன் காட்சியளித்ததன் இந்த சிறப்புக் கொண்டாட்டங்களில் தானும் இறைவேண்டலுடன் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இயேசு இப்புனிதருக்கு எவ்வாறு காட்சியளித்தாரோ, அதேபோன்று ஒரு படத்தை வரைந்து அதற்கு 'இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்' என எழுதுமாறு இயேசு, தன்   காட்சியின்போது கேட்டுக்கொண்டதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'என் இரக்கத்தின் ஆதாரத்தை மனிதகுலம் கண்டுகொள்ளும்வரையில் அதனால் அமைதியைக்  கண்டுகொள்ள இயலாது' என இயேசு, புனிதர் Faustina அவர்களிடம் கூறிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருணையின் ஆதாரத்தை நாடிச்சென்று, கருணையெனும் கொடைக்காக இயேசுவை நோக்கி வேண்டுவதோடு, அவர் நம்மை அரவணைக்கவும் நம்மில் ஊடுருவவும் அனுமதிப்போம் என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளடையாளங்களில், இயேசுவின் அன்பையும், இரக்கத்தையும் கண்டுகொண்டு, அதன் வழியாக பொறுமை, மன்னிப்பு, மற்றும் அன்பின் மனிதர்களாக நாமும் மாறுவோம் என, மேலும் விண்ணப்பித்துள்ளார்.

கருணையின் திருத்தூதராகிய திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், இறைவனின் கருணை நிறை அன்பை உலகம் முழுவதற்கும் எடுத்துச்சென்று அறிவிப்பதில், ஊக்கமூட்டி உழைத்தார் என்பதையும், தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் அன்பெனும் நெருப்பை, உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதோடு, நம் நடுவே இறைவன் இருப்பதன் எடுத்துக்காட்டாக செயல்படுவோம் எனவும், தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2021, 14:29