தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் காணொளிச் செய்தி திருத்தந்தையின் காணொளிச் செய்தி  (AFP or licensors)

அன்பும் பணியும் ஒன்றிணைந்துச் சென்றால்தான் வெற்றி

திருத்தந்தை : அனைத்து மக்களும், ஆதரவையும், அன்புகூரப்படுவதையும் உணர்வதற்கு, நல்லாயனாம் இயேசுவின் வாழ்வைப் பின்பற்றும் நாம் காரணமாக இருப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்தில், வெனிசுவேலா நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், துறவிகளின் பணி அனுபவங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைய வழி கலந்துரையாடல்களுக்கு தன் வாழ்த்துச் செய்தியை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி மாதம் 19, மற்றும், 20ம் தேதிகளில், அதாவது, செவ்வாய், மற்றும், புதன் கிழமைகளில் இடம்பெறும் இந்த இணைய வழி கலந்துரையாடல், 'இந்த பெருந்தொற்று காலத்தில் மேய்ப்புப் பணியாளர்களின் அனுபவமும் பணியும்' என்ற தலைப்பில் வெனிசுவேலா திருஅவையால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

களப் பணிக்கென தான் அனுப்பிய திருத்தூதர்கள் தன்னிடம் வந்து நடந்தவைகளைக் கூறக் கேட்ட இயேசு, அவர்களை நோக்கி,  “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” (மாற்.6:30-31) எனக் கூறியதை தன் காணொளிச் செய்தியின் துவக்கத்தில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழலிலும், நாம் அனைவரும், நம் ஒவ்வொரு பணிக்குப் பின்னரும், இயேசுவிடம் திரும்பி வந்து நம் மேய்ப்புப்பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, அருள்சாதன உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றித்திருக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.

தமக்கு அடுத்திருப்பவரை அன்புகூர்தல், மற்றும், ஒருவருக்கொருவர் பணிபுரிதல் என இரு கருத்துக்களை தான் வலியுறுத்த விரும்புவதாக இக்காணொளிச் செய்தியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தன் இறுதி இரவு உணவின்போது, அன்பை கற்பிக்க உருவாக்கிய திருநற்கருணையும், திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவியதும்,  அன்பும் சேவையும் ஒன்றிணைந்துச் சென்றால்தான் வெற்றியடைய முடியும் என்பதை காண்பிக்கிறது, என மேலும் குறிப்பிட்டார்.

நல்லாயனாம் இயேசுவின் வாழ்வைப் பின்பற்றி, நாமும், நம் சகோதரர்களை தாழ்ச்சியுடன் அன்புகூர்ந்து, பணியாற்றி, அனைத்து மக்களும், ஆதரவையும், அன்புகூரப்படுவதையும் உணர, நாம் காரணமாவோம் என்ற விண்ணப்பத்தையும் தன் செய்தியில், வெனிசுவேலா திருஅவைப் பணியாளர்களுக்கு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயாளிகளுக்கும், ஏழைகளுக்கும், ஆறுதலையும், வாழ்வின் ஊக்கத்தையும் வழங்கும் வகையில் செயல்பட்டுவரும் திருஅவைப் பணியாளர்களையும், அவர்களோடு ஒன்றிணைந்து சேவையாற்றும் மருத்துவ, மற்றும், சமுதாயப் பணியாளர்களையும் பாராட்டுவதாக தன் காணொளிச் செய்தியின் இறுதியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெனிசுவேலா திருஅவைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும், அனைவருக்காவும் செபிப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.

19 January 2021, 14:04