தேடுதல்

Vatican News
பணிஓய்வு பெறும் புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அன்டனி அனந்தராயர் பணிஓய்வு பெறும் புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அன்டனி அனந்தராயர்  

புதுச்சேரி-கடலூர் பேராயரின் பணிஓய்வு விண்ணப்பம் ஏற்பு

தன் 76வது வயதில் பணிஓய்வு பெறும் பேராயர் அன்டனி அனந்தராயர் அவர்கள், இவ்வாண்டு டிசம்பர் மாதம் தன் அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த அன்டனி அனந்தராயர் அவர்கள் பணிஓய்வு பெறவிழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 27, இப்புதனன்று ஏற்றுக்கொண்டார்.

1945ம் ஆண்டு, தமிழ்நாட்டின் வரதராஜன்பேட்டையில் பிறந்த அனந்தராயர் அவர்கள், 1971ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்ப்டுத்தப்பட்டபின், 1976ம் ஆண்டு, உரோம் நகரில் தன் உயர்படிப்பைத் தொடர்ந்தார்.

மறைப்பணி இயல், மற்றும் திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 1997ம் ஆண்டு, உதகை மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்று, பின்னர், 2004ம் ஆண்டு, புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார்.

இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் திருஅவை சட்டப்பணிக்குழுவின் தலைவராகப் பணியாற்றிய பேராயர் அனந்தராயர் அவர்கள், தமிழ்நாடு ஆயர் பேரவையின் துணைத்தலைவராகவும், அதன் திருவழிபாட்டுப் பணிக்குழு, உழைப்பு பணிக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தன் 76வது வயதில் பணிஓய்வு பெறும் பேராயர் அன்டனி அனந்தராயர் அவர்கள், இவ்வாண்டு டிசம்பர் மாதம் தன் அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வார் என்பதும், சனவரி 29ம் தேதி, அவர், உதகை ஆயராக அருள்பொழிவு பெற்று 24 ஆண்டுகளை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

27 January 2021, 14:09