தேடுதல்

தாத்தா பாட்டியுடன் பேரக்குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் பேரக்குழந்தைகள் 

தாத்தா பாட்டிகளையும், முதியோரையும் நினைவுகூரும் சிறப்பு நாள்

திருத்தந்தை : முதியோரின் குரல், இறைவனின் புகழைப் பாடுவதோடு, மக்களின் அடிப்படை ஆதாரத்தையும் பாதுகாப்பதாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாத்தா பாட்டிகளையும், முதியோரையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர உதவும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும், ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமையை அவர்களுக்கென அர்ப்பணிக்கும் நாளாக அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 26ம் தேதி சிறப்பிக்கப்படும் கன்னி மரியாவின் பெற்றோர்களாகிய, அதாவது, இயேசுவின் தாத்தா பாட்டிகளான, புனிதர்கள் சுவக்கின் மற்றும் அன்னா ஆகியோரின் திருநாளுக்கு அருகில் வரும் ஜூலை நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இந்த சிறப்பு நாள் இடம்பெறும் என அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, இந்த சிறப்பு நாள் ஜூலை 25ம் தேதி நிகழும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இந்த சிறப்பு நாள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவை கோவிலில் காணிக்கையாக வழங்கிய திருநாள் அண்மையில் வரவிருப்பதை எடுத்துரைத்து, அந்நாளில், வயது முதிர்ந்த சிமியோனும், அன்னாவும், இயேசுவை மெசியாவாக கண்டுகொண்டதை சுட்டிக்காட்டினார்.

அன்று கோவிலிலிருந்த சிமியோனும் அன்னாவும் தூய ஆவியாரால் தூண்டப்பட்டதுபோல், இன்றும் முதியோரின் எண்ணங்களையும், வார்த்தைகளையும், ஞானத்தையும் தூண்டுபவராக, தூய ஆவியார் உள்ளார், ஏனெனில் முதியோரின் குரல், இறைவனின் புகழைப் பாடுவதோடு, மக்களின் அடிப்படை ஆதாரத்தையும் பாதுகாப்பதாக உள்ளது, என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வயது முதிர்வு என்பது ஒரு கொடையாகும் என்றுரைத்த திருத்தந்தை, முதியோர் என்பவர்கள், தங்கள் வாழ்வு அனுபவத்தை இளையத் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் இணைப்புச் சங்கிலியாக உள்ளனர், என்று கூறினார்.

முதியோர், தாங்கள் பெற்றதை மற்றவர்களுக்கு கொடுத்துச் செல்வது, மற்றும், சமுதாயத்தின் அடிப்படை ஆதாரத்தை பாதுகாப்பது போன்ற முக்கியப் பணிகளைப் பெற்றுள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்காமல், இன்றைய சமுதாயம் அவர்களை மறந்து செயல்பட்டுவருவது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாத்தா, பாட்டிகளும், பேரக்குழந்தைகளும் ஒருவரையொருவர் அறிந்து, நெருக்கமாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2021, 13:09