தேடுதல்

திருத்தந்தையுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு (18.01.2019) திருத்தந்தையுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு (18.01.2019) 

ஒன்றிப்பின் வழியே, இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற...

திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளும், யூத-கத்தோலிக்க கலந்துரையாடல்களும் நல்கனிகளைக் கொணரட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், இத்திங்களன்று துவங்குவதைக் குறித்து, ஜனவரி 17, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் நினைவூட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இணைய வலைத்தொடர்பு வழியாக இத்திங்கள்கிழமை, ஜனவரி 18 முதல் இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், சனவரி 25ம் தேதி சிறப்பிக்கப்படும் திருத்தூதர் பவுலின் மனமாற்றத் திருநாளன்று, உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலில், கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் திருப்புகழ் மாலை வழிபாட்டுடன் நிறைவுக்கு வரும் எனவும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“என் அன்பில் நிலைத்திருங்கள், மற்றும், நீங்கள் மிகுந்த கனிதரும்பொருட்டு” (யோவா. 15: 5-9) என்ற தலைப்பு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்கென எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஒப்புரவும், ஒன்றிப்பும் நிலவ, கிறிஸ்தவ சமுதாயத்தினர் இறைவேண்டல் எழுப்பி, ஒன்றிப்பு குறித்த இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற உழைப்போம் எனவும்  அழைப்புவிடுத்தார்.

மோதல்களைவிட மிக உயர்ந்தது ஒன்றிப்பு என்பதையும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கத்தோலிக்கர்களுக்கும் யூத மதத்தினருக்கும் இடையே உரையாடல்களை ஊக்குவித்து ஆழப்படுத்தும் 32வது ஆண்டு நிறைவு நாள் சிறப்பிக்கப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் இந்த முயற்சிகள், ஒத்துழைப்பு, மற்றும், உடன்பிறந்த நிலைகளின் கனிகளைக் கொணரட்டும் என்ற ஆவலையும் வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2021, 12:58