தேடுதல்

Vatican News
கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

கடவுள் நமக்கென வகுத்துள்ளது, அன்பின் திட்டம்

இந்தோனேசியாவின் Sulawesi தீவில் இடம்பெற்ற பெரும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோர், மற்றும், இந்தோனேசிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக செபிக்க அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நீங்கள் என் அன்பில் நிலைத்திருந்தால், மிகுந்த கனி தருவீர்கள் என்ற இயேசுவின் சொற்களை மையக்கருத்தாகக் கொண்டு, சனவரி 18, இத்திங்களன்று துவங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை, அனைவருக்கும் நினைவூட்டி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கடவுள் நமக்கென வகுத்த திட்டத்திற்கு நம் பதிலுரை, கடவுளுக்கும், அயலவருக்கும் பணிபுரிவதை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த கருத்தை, தன் முதல் டுவிட்டரில்  பதிவு செய்துள்ளார்.

தன் இரண்டாவது டுவிட்டரில், கத்தோலிக்கருக்கும் யூதர்களுக்கும் இடையே இடம்பெறும் கலந்துரையாடல் நல்ல கனிகளைத் தரட்டும் எனற ஆவலையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்தோனேசியாவின் Sulawesi தீவில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் குறித்து தன் மூன்றாவது டுவிட்டரில் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நிலநடுக்கத்தாலும், இந்தோனேசிய விமான விபத்திலும் உயிரிழந்தவர்களுக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

18 January 2021, 15:08