தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ வாகனம் திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ வாகனம்   (ANSA)

வீடற்ற இத்தாலிய மனிதருக்கு இறுதி மரியாதை

ஆண்டவர் நம்மிடம் பேசும்போது, நாம் அவரது இதயத்தில் இருக்கிறோம், மற்றும், அவரின் கண்களுக்கு நாம் விலையறேப்பெற்றவர்கள் என்பதை நினைவுபடுத்துகிறார் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, குணமளிக்கும் மருந்தாக இறைவார்த்தை உள்ளது என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 26, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியை  வெளியிட்டுள்ளார்.

“இறைவார்த்தை, வாழ்வை எதிர்கொள்வதற்கு நாம் கொண்டிருக்கும் அச்சத்திற்கு மாற்று மருந்து. ஆண்டவர் நம்மிடம் பேசும்போது, நாம் அவரது இதயத்தில் இருக்கிறோம், அவரின் கண்களுக்கு நாம் விலையறேப்பெற்றவர்கள், மற்றும், அவர் நம்மை, தன் உள்ளங்கைகளில் வைத்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்துகிறார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.

வீடற்ற இத்தாலிய மனிதருக்கு இறுதி மரியாதை

மேலும், திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றும் கர்தினால் Konrad Krajewski அவர்கள், இவ்வாரத்தில் இறைபதம் சேர்ந்த, 64 வயது நிறைந்த, வீடற்ற இத்தாலிய மனிதர் Roberto Mantovani அவர்களின் அடக்கச்சடங்கை நிறைவேற்றி, இறுதி மரியாதை செலுத்தினார்.

ஏழை இலாசரும், செல்வந்தரும் என்ற லூக்கா நற்செய்தி செய்திப் பகுதியை மையப்படுத்தி, மறையுரை வழங்கிய, கர்தினால் Krajewski அவர்கள், இரோபெர்த்தோ அவர்கள், தெருவில் தான் சந்தித்த அத்தனை மனிதர்களிடமும் எப்போதும் புன்னகை சிந்தியவர் என்று கூறினார்.

உரோம் நகரின் மத்திய இரயில் நிலையத்திற்கருகில் அமைந்துள்ள, காரித்தாஸ் மையத்தில் பராமரிக்கப்பட்டுவந்த இரோபெர்த்தோ அவர்கள், தன்னார்வலர்களின் அரவணைப்பில் இறுதி மூச்சை விட்டார் என்று, கர்தினால் Krajewski அவர்கள் கூறினார்.  

ஆஸ்திரேலிய கர்தினால் பெல், திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் திருப்பீட பேராயத்தின் செயலர் பேராயர் Arthur Roche உட்பட, 12 அருள்பணியாளர்கள் இந்த அடக்கச்சடங்கு கூட்டுத்திருப்பலியில் பங்குபெற்றனர்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 24, இஞ்ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வீடற்ற மனிதர், 46 வயது எட்வின் என்பவர், கவனிப்பாரின்றி, கடுங்குளிரில், புனித பேதுரு வளாகம் அருகே உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டதோடு, எட்வினுக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்து, தானும் சில நிமிடம் மௌனமாக செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

26 January 2021, 14:55