தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செப உரையின்போது வெனெசுவேலா மக்கள் திருத்தந்தையின் மூவேளை செப உரையின்போது வெனெசுவேலா மக்கள் 

வெனெசுவேலா நாட்டு மக்களுக்காக இறைவேண்டல்

உரோம் மாநகரின் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி அவர்களும், இத்தாலியின் லாட்சியோ மாநிலத்தின் தலைவர் நிக்கொலா ஜிங்கரெத்தி அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் மக்களிடம், பரிவன்புடன் நாம் நடந்துகொள்ள, குழந்தை இயேசுவின் உதவியை இறைஞ்சுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 08, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

“பல்வேறு துயர நிலைகளில் வாழ்கின்ற மக்களிடம், குறிப்பாக, வலுவிழந்தோர், நோயாளிகள், வேலையின்றி இருப்போர், துன்பங்கள் அடைவோர் போன்றோருக்கு, நம் ஆதரவையும், உதவும் மனப்பான்மையையும் தாராளமாக வெளிப்படுத்துவதற்கு, பெத்லகேமின் குழந்தை, நமக்கு உதவுவாராக” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.

மேலும், சனவரி 08, இவ்வெள்ளியன்று, உரோம் மாநகரின் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி அவர்களும், இத்தாலியின் லாட்சியோ மாநிலத்தின் தலைவர் நிக்கொலா ஜிங்கரெத்தி அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

வெனெசுவேலாவுக்காக இறைவேண்டல்

இன்னும், கோவிட்-19 பெருந்தொற்றாலும், வறுமையாலும் துன்புறும் வெனெசுவேலா நாட்டு மக்களுடன், தன் அருகாமை, மற்றும், இறைவேண்டல்களைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் கரகாஸ் நகரின் அப்போஸ்தலிக்க நிர்வாகியும், Merida உயர்மறைமாவட்ட பேராயருமான கர்தினால் Baltazar Porras Cardozo அவர்களின் நாம விழாவுக்கு வாழ்த்துக்கூறி எழுதிய மடலில், அந்நாட்டிற்காக தான் இறைவனை மன்றாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கீழ்த்திசை ஞானிகள் மூவரில் ஒருவரின் பெயரைக் கொண்டுள்ள கர்தினால் Baltazar Porras Cardozo அவர்கள், தன் நாம விழாவை, சனவரி 06, இப்புதனன்று சிறப்பித்தார்.

வெனெசுவேலாவில் கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள கடுந்துன்பங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணவம், மற்றும், அதிகரித்துவரும் வறுமை ஆகியவற்றால் கடுந்துன்பங்களைச் சந்தித்துவரும் மக்களுடன், கர்தினால் பல்த்தசார் அவர்கள், ஒரு தந்தைக்குரிய இதயத்தோடு பயணிக்க, கடவுள் அவருக்கு வலிமையையும், துணிவையும் அருள்வாராக என்று, தன் மடலில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

கர்தினால் Baltazar Porras Cardozo அவர்களை, புனித யோசேப்பு, மற்றும், புனித பல்த்தசாரின் பாதுகாவலில் வைத்துச் செபிப்பதாகவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

08 January 2021, 14:40