தேடுதல்

Vatican News
பேராயர் Kurian Mathew Vayalunkal பேராயர் Kurian Mathew Vayalunkal  

அல்ஜீரியாவிற்கு புதிய திருப்பீட தூதர் பேராயர் Vayalunkal

கிறிஸ்மஸ் குடிலை பார்க்கும்போது, நாம், குழந்தைபோன்று சிறியவர்களாக மாறுகிறோம். கனிவன்பு அதிகம் தேவைப்படும் காலத்தில் நாம் உள்ளோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலைகளை எதிர்நோக்கிவரும் இன்றைய உலகிற்கு, கனிவு என்ற பண்பு அதிகம் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 02, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

“கிறிஸ்மஸ் குடிலை பார்க்கும்போது, நாம், குழந்தைபோன்று சிறியவர்களாக மாறுகிறோம், மற்றும், கடவுள் இந்த உலகத்திற்கு வந்து நம்மில் மறுபிறப்படைய விரும்புகின்ற, திகைக்க வைக்கும் வழியின் வியப்பில் நம்மை அனுமதிக்கிறோம். இது, நம்மில் கனிவன்பை புத்துயிர் பெறச்செய்யும். மேலும், கனிவன்பு அதிகம் தேவைப்படும் காலத்தில் நாம் உள்ளோம்!” என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த கிறிஸ்மஸ் காலத்தில், கிறிஸ்துவின் பிறப்பு கொணர்ந்த நற்செய்திகளைச் சிந்திப்பதற்கு உதவியாக, தன் டுவிட்டர் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.

அல்ஜீரியாவிற்கு, திருப்பீட தூதர்

மேலும், அல்ஜீரியா நாட்டிற்கு, திருப்பீடத் தூதராக, பேராயர் Kurian Mathew Vayalunkal அவர்களை, சனவரி 01, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பேராயர் Vayalunkal அவர்கள், கேரளாவின் Vadavathoorல் 1966ம் ஆண்டு பிறந்தவர். 1991ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1998ம் ஆண்டில் திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் இணைந்தார். இவர், கினி, தென் கொரியா, தொமினிக்கன் குடியரசு, பங்களாதேஷ், ஹங்கேரி, எகிப்து ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

2010ம் ஆண்டில் ஹெய்ட்டி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வத்திக்கானின் இடர்துடைப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்பார்வையிடவும் இவர் அனுப்பப்பட்டார். 2016ம் ஆண்டில் பாப்புவா நியு கினி மற்றும், சாலமோன் தீவுகளுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்ட பேராயர் Vayalunkal அவர்கள், இவ்வெள்ளியன்று அல்ஜீரியாவிற்கு, திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராயர் Kurian Mathew Vayalunkal அவர்கள், உரோம் திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். மேலும், இவர் உரோம் திருஅவை நிறுவனத்தில் தூதரகக் கல்வியையும் முடித்திருப்பவர்.

02 January 2021, 14:50