ஏழ்மை வழியாக அற்புதங்களை ஆற்ற விரும்பும் இறைவன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
பெத்லகேமில் ஆற்றியதைப்போல் இறைவன், நம் ஏழ்மையின் வழியாக பல அற்புதங்களை ஆற்ற ஆவல் கொண்டுள்ளார் என்ற கருத்தை மையமாக வைத்து, சனவரி 4, இத்திங்களன்று, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பெத்லகேமில் ஆற்றியதைப்போல் இறைவன், நம் ஏழ்மையின் வழியாக பல அற்புதங்களை ஆற்ற விரும்புகிறார். நம் மீட்பு முழுவதையும், மாடடைக்குடிலில் வைத்த இறைவன், நம் ஏழ்மையைக் குறித்து அச்சம்கொள்ளவில்லை, ஆகவே, அதனை முழுமையாக மாற்றியமைக்க, இறைவனின் கருணையை அனுமதிப்போம், என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.
மேலும், நம்மை எப்போதும் நினைத்துக்கொண்டு, நம்மோடு உரையாட விரும்பும் இறைவனின் முடிவற்ற வார்த்தையே இயேசு, என்று நண்பகல் மூவேளை செப உரையில் வழங்கிய வார்த்தைகளை, சனவரி 3, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை, தான் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
சனவரி 04, இத்திங்கள் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2.995 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.