தேடுதல்

திருநீற்றுப் புதன் திருநீற்றுப் புதன்  

திருநீற்றுப் புதன் வழிமுறைகளில் மாற்றங்கள்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளை மனதில்கொண்டு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனன்று பின்பற்றவேண்டிய வழிமுறைகளில், ஒரு சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி, பிப்ரவரி மாதங்களில் முன்னின்று நடத்தும் ஒரு சில திருவழிபாட்டு நிகழ்வுகளை, திருப்பீடத்தின் திருவழிபாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும், அருள்பணி குயிதோ மரீனி அவர்கள், இச்செவ்வாய் மாலையில் வெளியிட்டார்.

சனவரி, பிப்ரவரி திருவழிபாட்டு நிகழ்வுகள்

சனவரி 24, பொதுக்காலத்தின் 3ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இறைவார்த்தையின் ஞாயிறையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 10 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார்.

சனவரி 25, திங்கள், திருத்தூதரான புனித பவுல் மனமாற்றம் அடைந்த திருநாளன்று, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் நிறைவுறுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 5.30 மணிக்கு, புனித பவுல் பெருங்கோவிலில் திருப்புகழ் மாலை வழிபாட்டினை முன்னின்று நடத்துவார்.

மேலும், பிப்ரவரி 2ம் தேதி, செவ்வாயன்று, ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணிக்கும் விழாவும், அர்ப்பணிக்கப்பட்டோரின் 25வது உலகநாளும் சிறப்பிக்கப்படுவதையொட்டி, மாலை 5.30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில், இருபால் துறவியர் பங்கேற்கும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துவார்.

திருநீற்றுப் புதன் வழிமுறைகளில் மாற்றம்

திருப்பீடத்தின் இறைவழிபாட்டு பேராயம், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளை மனதில் கொண்டு, இவ்வாண்டு பிப்ரவரி 17ம் தேதி சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனன்று பின்பற்றவேண்டிய வழிமுறைகளில், ஒரு சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

திருநீற்றுப் புதன் திருப்பலியின்போது, பீடத்தில் வைக்கப்பட்டுள்ள சாம்பலை ஆசீர்வதிக்கும் செபங்களை அருள்பணியாளர் கூறியபின், சாம்பலின் மீது அர்ச்சிக்கும் நீரைத் தெளிப்பார் என்றும், அதைத் தொடர்ந்து, "மனம் திரும்பி, நற்செய்தியை நம்புங்கள்" அல்லது, "மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்ற சொற்களை, பீடத்தில் இருந்தவண்ணம் ஒரே ஒரு முறை மட்டுமே அருள்பணியாளர் கூறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அருள்பணியாளர் தன் கரங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, முகத்தில் கவசம் அணிந்துகொண்டு, மக்களுக்கு சாம்பலை வழங்கும்போது, அந்த சாம்பலை அவர்கள் மீது தெளிக்கவேண்டும் என்றும், அவ்வேளையில், எந்த ஒரு மந்திரத்தையும் சொல்லக்கூடாது என்றும் திருவழிபாட்டு பேராயம் அறிவித்துள்ளது.

13 January 2021, 14:32