தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரை 270121 புதன் மறைக்கல்வியுரை 270121  (Vatican Media)

மறைக்கல்வியுரை: திருவிவிலியம், கடவுள் மனிதரைச் சந்திக்கும் இடம்

விவிலியம், உயிருள்ள இறைவார்த்தையாக, வாழ்வில், எல்லா வேளைகளிலும் நம்மிடம் பேசுகின்றது, மற்றும், இந்த உலகு பற்றியும், இந்த உலகையும், வழக்கமாக நாம் பார்க்கும் பார்வைக்குப் பலநேரங்களில் சவால்விடுகின்றது.

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்தாலிய அரசு விதித்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில், தன் நூலக அறையிலிருந்து, தனது வழக்கமான புதன் மறைக்கல்வியுரைகள், மற்றும், ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைகளை வழங்கி வருகிறார். கடந்த பல வாரங்களாக, கிறிஸ்தவ இறைவேண்டலை மையமாக வைத்து, மறைக்கல்வியுரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 27, இப்புதனன்று, “செப வாழ்வில் திருவிவிலியம்” என்ற தலைப்பில், தன் சிந்தனைகளை வழங்கினார். முதலில், திருப்பாடல் 119லிருந்து சில எண்கள் வாசிக்கப்பட்டன. அதற்குப்பின் திருத்தந்தை, தன் மறைக்கல்வியுரையை ஆரம்பித்தார்.  

  • மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
  • உம் நியமங்களைக் குறித்து நான் சிந்திப்பேன்; உம் நெறிகளில் என் சிந்தையைச் செலுத்துவேன்;
  • உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.
  • நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன்
  • என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!
  • உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. (தி.பா.119,1.15.18.48.105.130)

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் பற்றிய நமது மறைக்கல்வியில், இன்று, செப வாழ்வில் திருவிவிலியத்தின் முக்கியத்துவம் பற்றிச் சிந்திப்போம். கடவுளுக்கும், நமக்கும் இடையே, ஓர் உரையாடல் நடக்கும்பொருட்டு, செபச்சூழலில், விவிலியத்தை வாசிப்பதற்கு, மறைக்கல்வி ஏடு நம்மை ஊக்கப்படுத்துகின்றது (காண்க. எண்.2653). விவிலியத்தை எழுதுவதற்குத் தூண்டுகோலாய் இருந்த தூய ஆவியார், அனைத்து நம்பிக்கையாளர் இதயங்களிலும் குடியிருக்கிறார். அதனால், செபச்சூழலில், வெளிப்படுத்தப்பட்ட இறைவார்த்தையோடு அடிக்கடி சந்திப்பதன் வழியாக, நாம் மூவொரு கடவுளோடு உள்ள உறவில் மேலும் ஆழமாகச் செல்வதற்கு நம்மால் இயலுகின்றது. விவிலியம், உயிருள்ள இறைவார்த்தையாக, வாழ்வில், எல்லா வேளைகளிலும் நம்மிடம் பேசுகின்றது, புதிய சூழல்களை ஒளிரச்செய்கின்றது, புத்தம் புதிய உள்தூண்டுதல்களை வழங்குகின்றது, மற்றும், இந்த உலகு பற்றியும், இந்த உலகையும், வழக்கமாக நாம் பார்க்கும் பார்வைக்குப் பலநேரங்களில் சவால்விடுகின்றது. இறைவேண்டல், மற்றும், விவிலியத்தை வாசிப்பதற்கு கிடைக்கும் பயனை, சிறப்பாக, lectio divina எனப்படும் இறைவார்த்தையை வாசித்து, தியானிக்கும் பழக்கத்தில் காண முடிகின்றது. lectio divina என்பது, விவிலியத்தின் ஒரு பகுதியை நிதானமாக வாசித்தல், பின்னர், நேரம் ஒதுக்கி, வாசித்த அந்தப் பகுதியை, தூய ஆவியாருக்குத் திறந்தமனம்கொண்டு தியானித்தல், குறிப்பிட்ட ஒரு சொல், சொற்றொடர், அல்லது உருவம், ஆகியவை வழியாக, கடவுள் நம்மிடம் பேசுவதற்கு அனுமதித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இறைத்தந்தையின் அன்புள்ள பார்வையின்கீழ், நாம் அமைதியாக அமரும்போது, நாம் அவரோடு மேற்கொள்ளும் பயனுள்ள உரையாடலே, ஆழ்நிலைதியானமாகும். இவ்வாறு, அமைதி, ஞானம், மற்றும், சக்தியின் வற்றாத ஓர் ஊற்றாக, விவிலியம் மாறுகிறது. நாமும், நம்பிக்கையிலும் பிறரன்பிலும், மற்றவருக்குப் பணியாற்றுவதிலும் வளர்கின்றோம்.

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, விவிலியத்தோடு இறைவேண்டல் செய்தல் என்பது பற்றிய தன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார். திருவிவிலியம் நம் அன்றாட வாழ்வில் ஒளிரச்செய்வதை, அதிகமதிகமாக நாம் உய்த்துணர தூய ஆவியார் நம்மை வழிநடத்துவாராக என்றும் திருத்தந்தை வாழ்த்தினார்.

இரண்டாம் உலகப் போரின்போது, Auschwitz வதைமுகாமில் துன்புற்றோர் விடுதலை செய்யப்பட்டது மற்றும், யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை. கத்தோலிக்கப் பள்ளிகளின் பாதுகாவலராகிய இப்புனிதர், அனைவருக்கும், குறிப்பாக, மாணவ, மாணவிகள், தங்கள் வாழ்வின் ஒரே ஆசிரியரை இயேசுவில் காணவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்தார்.

27 January 2021, 14:33