தேடுதல்

Vatican News
Manaus நகரில் பெருந்தொற்றினால் இறந்தவரை அடக்கம் செய்தல் Manaus நகரில் பெருந்தொற்றினால் இறந்தவரை அடக்கம் செய்தல்  (AFP or licensors)

அமேசான் மக்களுக்காக திருத்தந்தையின் இறைவேண்டல்

பிரேசில் நாட்டின் Manaus நகரிலும், அதைச் சுற்றியுள்ள அமேசான் மழைக்காட்டுப் பகுதியிலும் வாழும் மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 18, இத்திங்கள் முதல், சனவரி 25, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படும் புனித பவுலின் மனமாற்றத் திருநாள் முடிய கடைபிடிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வாரத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 21 இவ்வியாழனன்று இரு டுவிட்டர் செய்திகளை பதிவு செய்துள்ளார்.

"இறைவேண்டலின் ஒரு கனியாக மட்டுமே கிறிஸ்தவ ஒன்றிப்பை அடையமுடியும். இயேசு, ஒன்றிப்பின் பாதையை தன் இறைவேண்டல் வழியே திறந்துவைத்தார். எனவே, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கென நாம் மேற்கொள்ளும் இறைவேண்டல் அவரது இறைவேண்டலில் பங்கெடுப்பதாகும். தன் பெயரால் எழுப்பப்படும் செபங்களை தந்தை செவிமடுப்பார் என்ற வாக்குறுதியை இயேசு வழங்கியுள்ளார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

"கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும், இயேசு என்ற திராட்சைக்கொடியின் கிளை. நாம் அனைவரும் இணைந்து பொதுவான உறுப்பினர்கள் என்ற கனியைக் கொணர அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், பிரேசில் நாட்டின் Manaus நகரிலும், அதைச் சுற்றியுள்ள அமேசான் மழைக்காட்டுப் பகுதியிலும் வாழும் மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்காக சிறப்பான இறைவேண்டல் செய்வதாக சனவரி 20, இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அவர் புதன் பிற்பகலில் போர்த்துகீசிய மொழியில் மட்டும் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில், Manaus நகரிலும், வட பிரேசில் பகுதியிலும் பெருந்தொற்றினால் துன்புறும் அனைவரையும் இறைவனின் கருணை தாங்கி காக்கவேண்டும் என்ற சொற்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

21 January 2021, 15:04