தேடுதல்

Vatican News
பிறரன்புப் பணிகள் பிறரன்புப் பணிகள்  

நீதியுள்ள உலகைக் கட்டியெழுப்புவது நம் ஒரே குறிக்கோள்

1971ம் ஆண்டில், பெல்ஜியம் நாட்டில் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுவதற்கென, ஒன்றுசேர்ந்து வாழ்வோம் என்ற அமைப்பு ஆயர்களால் உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்கின்ற மக்களோடு தோழமையுணர்வுகொண்டு, அவர்களின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றும், பெல்ஜியம் நாட்டின் இரு பிறரன்பு அமைப்புக்களுக்கு (Entraide et Fraternité e Action Vivre ensemble) சனவரி 29, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை அனுப்பியுள்ளார். 

உலகம் முழுவதையும் நெருக்கடியில் வைத்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று, மிக வறியோர் மற்றும், விளிம்புநிலையில் உள்ளோரை அதிகம் பாதித்துள்ளவேளை, இந்த  அமைப்புகள் ஆற்றும் பணிகளை, முன்பிருந்ததைவிட இப்போது, மேலும் அதிகமாகத் தொடர்ந்து ஆற்றுவது மிகவும் முக்கியம் என்று, திருத்தந்தை, தன் செய்தியில் கூறியுள்ளார்.

நீதியும், உடன்பிறந்த உணர்வும்கொண்ட உலகைக் கட்டியெழுப்புவதை, நாம் எல்லாரும் ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை,   ஏற்றுக்கொள்ள முடியாத வறுமையோடு ஒவ்வொரு நாளும் போராடிவருகின்ற மக்களுக்கு உதவுகின்ற, இந்த அமைப்புகளில் பணியாற்றுவோர் மற்றும், அவற்றுக்கு பல்வேறு வழிகளில் உதவும் அனைவரையும் தான் ஊக்கப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

கிறிஸ்துவின் அருளால், நல்ல சமாரியர்களாக, சமுதாய நட்புணர்வு மற்றும், உடன்பிறந்த உணர்வின் பாதையில் தொடர்ந்து தளர்வுறாமல் அர்ப்பணிப்பதற்கு, தன் ஆசீரை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தனக்காகவும், உலகளாவியத் திருஅவைக்காகவும் மறக்காமல் இறைவனை மன்றாடுமாறும், தன் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த இரு பிறரன்பு அமைப்புகளும் உருவான வரலாறு பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவரக்கள், பெல்ஜியம் நாட்டின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்ற (1960, ஜூன் 30) காங்கோ நாட்டிற்கு, கத்தோலிக்கர் தங்கள் வளங்களை வழங்கி உதவுமாறு, 1961ம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், "Share Lent" என்ற பெயரில் தொடங்கிய பிறரன்பு நடவடிக்கையே, பின்னாளில், Entraide et Fraternité என்ற அமைப்பாக மாறி, நற்பணியாற்றி வருகின்றது என்று கூறினார்.

பெல்ஜியத்தில், இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டில், உலகின் மற்ற பகுதிகளுக்கும் பணியை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு, தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1971ம் ஆண்டில், பெல்ஜியம் நாட்டிலேயே வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுவதற்கென, ஒன்றுசேர்ந்து வாழ்வோம் (Action Vivre ensemble) என்ற அமைப்பு ஆயர்களால் உருவாக்கப்பட்டுப் பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டார்.

 

29 January 2021, 15:32