தேடுதல்

Vatican News
ஏமன் நாட்டில், தொடர்ந்து வரும் பிரச்சனைகளுக்காக செபிக்க திருத்தந்தையின் அழைப்பு ஏமன் நாட்டில், தொடர்ந்து வரும் பிரச்சனைகளுக்காக செபிக்க திருத்தந்தையின் அழைப்பு 

மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தையின் விண்ணப்பங்கள்

ஏமன் நாட்டில், பசியாலும், நோயாலும், கல்வியின்மையாலும் துன்புறும் பல்லாயிரம் குழந்தைகளை நினைவில் கொண்டு அவர்களுக்காக செபிப்போம் – திருத்தந்தையின் விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 1, புத்தாண்டு நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் நூலக அறையிலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், தனக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த வேளையில், இத்தாலி நாட்டின் அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறினார்.

உலக அமைதி நாளையொட்டி, Pax Christi, Caritas, Sant’Egidio ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், கணணி வழி வலைத்தள முயற்சிகள் வழியே மேற்கொண்டுள்ள பல்வேறு அமைதி, மற்றும் பிறரன்பு முயற்சிகளை தான் மணமாரப் பாராட்டுவதாக திருத்தந்தை தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் 27 கடந்த ஞாயிறன்று நைஜீரியா நாட்டின் Owerri உயர் மறைமாவட்டத்தில் துணை ஆயராகப் பணியாற்றிவரும் ஆயர் Moses Chikwe அவர்களும், அவரது காரோட்டியும் ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, அவர்களுக்காக செபிக்கும்படி திருத்தந்தை விண்ணப்பித்தார்.

ஏமன் நாட்டில், தொடர்ந்து வரும் பிரச்சனைகளின் காரணமாக, அங்கு, பசியாலும், நோயாலும், கல்வியின்மையாலும் துன்புறும் பல்லாயிரம் குழந்தைகளை நினைவில் கொண்டு அவர்களுக்காக செபிப்போம் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சில நொடிகள் அமைதியில் செபித்தார்.

அனைவருக்கும் இவ்வாண்டு அமைதி நிறைந்த ஆண்டாக அமைய தான் செபிப்பதாகவும், தனக்காக செபிக்கும்படியும் கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து, திருத்தந்தை, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

01 January 2021, 12:50