தேடுதல்

டிசம்பர் 31 மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற 'Te Deum' நன்றி வழிபாடு டிசம்பர் 31 மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற 'Te Deum' நன்றி வழிபாடு  

நன்றி வழிபாட்டில் வாசிக்கப்பட்ட திருத்தந்தையின் மறையுரை

எவ்வித விளம்பரம் இன்றி, இவ்வுலகில், பல்லாயிரம் பேர், தங்கள் உதவிக்கரத்தை நீட்டியதற்கும், பாரங்களால் துன்புற்றோரின் பாரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொண்டதற்கும், திருத்தந்தையின் நன்றி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'சியாட்டிகா' எனப்படும் நரம்புத் தொடர்பான பிரச்சனையால் டிசம்பர் 31ம் தேதி மாலை 'Te Deum' நன்றி வழிபாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டின் இறுதி நாளன்று நாம் எவ்வாறு நன்றி நிறைந்தவர்களாக இருக்கமுடியும் என்பதை, ஒரு மறையுரை சிந்தனையாக வழங்கினார்.

புனித பேதுரு பெருங்கோவிலில், டிசம்பர் 31 இவ்வியாழன் மாலை நடைபெற்ற நன்றி வழிபாட்டை, கர்தினால்கள் அவையின் தலைவர், கர்தினால் ஜியோவான்னி பத்திஸ்தா ரே அவர்கள், திருத்தந்தைக்குப் பதிலாக முன்னின்று நடத்தி, திருத்தந்தை எழுதியிருந்த மறையுரை சிந்தனைகளை வாசித்தார்.

நாம் கடந்த வந்த ஆண்டில் குடும்ப உறவுகளை இழந்து, வேலைகளை இழந்து, தனிமையில் துன்புற்று வந்ததால், இந்த ஆண்டைக் குறித்து நன்றி சொல்வது, சற்று செயற்கையாக, கடினமாக உள்ளது என்பதை திருத்தந்தை தன் சிந்தனைகளின் துவக்கத்தில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மனிதகுலம் துன்பங்களில் சிக்கியபோது, அதற்கு அறிவுப்பூர்வமான விளக்கங்கள் தருவதற்குப் பதில், இறைவன், தன் ஒரே திருமகனை மனிதனாக நம்மிடையே அனுப்பியதே அவர் தரும் பதில் என்று, திருத்தந்தை, தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல சமாரியரைப்போல், இறைவனும், துன்புறும் மனிதரைக் கண்டதும், தன் பதிலிறுப்பை செயல்வடிவில் காட்டியுள்ளார் என்று, தன் சிந்தனையில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கடந்த ஓராண்டளவாக சந்தித்த துன்பங்களுக்கு எவ்வகையில் பதிலிறுத்திருக்கிறோம் என்பதை சிந்திக்க, இந்த இறுதி நாள் நல்லதொரு தருணம் என்று கூறினார்.

எவ்வித விளம்பரம் இன்றி, இவ்வுலகில் பல்லாயிரம் பேர், தங்கள் உதவிக்கரத்தை நீட்டியதையும், பாரங்களால் துன்புற்றோரின் பாரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொண்டதையும், திருத்தந்தை, தன் உரையில் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி கூறினார்.

இவர்களில் குறிப்பாக, மருத்துவத் துறையினர், கல்வித் துறையினர், பொதுப்பணித் துறையினர் ஆகியோரை சிறப்பாகக் குறிப்பிட்டு, தன் நன்றியை தெரிவித்தார் திருத்தந்தை.

பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல், இந்த நல்ல உள்ளங்கள் ஆற்றிய பணி, இறைவனின் அருள், சுயநலனை விட கூடுதல் வலிமை பெற்றது என்பதை இவ்வுலகிற்குப் பறைசாற்றுகிறது என்பதை, திருத்தந்தை, தன் சிந்தனையில் பகிர்ந்துகொண்டார்.

எதிர்காலத்தை நம்பிக்கையோடு நாம் நோக்குவோம் என்று, தன் சிந்தனையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'Te Deum' நன்றிப் பாடலில் பயன்படுத்தப்படும், "இறைவா உம் கருணை எம்மீது என்றும் நிலைக்கட்டும், ஆண்டவரே நாங்கள் உம்மையே நம்பியுள்ளோம்" என்ற சொற்களுடன் தன் உரையை நிறைவு செய்துள்ளார்.

01 January 2021, 15:05