தேடுதல்

Vatican News
குரோவேசியா நிலநடுக்கம் குரோவேசியா நிலநடுக்கம்   (AFP or licensors)

குரோவேசியா நிலநடுக்கம் – திருத்தந்தையின் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கபப்ட்டுள்ள குரோவேசியா நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1,21,000 டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார் - தலத்திருஅவை அறிவிப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 29ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கபப்ட்டுள்ள குரோவேசியா நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1,21,000 டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார் என்று, தலத்திருஅவை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் 29ம் தேதி, 6.4 ரிக்டர் அளவில் உருவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள Banija பகுதியில், துயர் துடைப்பு பணிகளை மேற்கொண்டுவரும் குரோவேசியா நாட்டு காரித்தாஸ் நிறுவனத்திற்கு, திருத்தந்தையின் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் வழியே வழங்கப்பட்ட இந்த நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட குரோவேசிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர் ஆயர் Bože Radoš அவர்கள், திருத்தந்தைக்கும், இத்திருப்பீட அவைக்கும், சனவரி 26, இச்செவ்வாயன்று, தன் நன்றியை தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும், எண்ணற்ற தன்னார்வலர்களின் அன்பையும், பல்வேறு நிறுவனங்களின் உதவிகளையும் பெற்றுவந்துள்ள நாங்கள், தற்போது, தகுந்த வேளையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இந்த உதவியைப் பெற்றமைக்காக, குரோவேசியா மக்களின் நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று, காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி Fabijan Svalina அவரகள் கூறினார்.

டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குரோவேசியா ஆயர் பேரவை, 10 இலட்சம் டாலர்களை அவசர கால நிதி உதவியாக வழங்கியதுடன், காரித்தாஸ், மற்றும் Order of Malta ஆகிய நிறுவனங்களின் வழியே, வீடிழந்த மக்களுக்கு தற்காலிக உறைவிடங்கள் அமைப்பதில் உதவி செய்து வருகிறது.

28 January 2021, 15:13