தேடுதல்

Vatican News
அணு ஆயுத குவிப்பு அணு ஆயுத குவிப்பு  (Gerasimov)

அணு ஆயுத தடை ஒப்பந்தம் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ்

2017ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ஐ.நா. நிறுவனத்தின் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட, அணு ஆயுத தடை ஒப்பந்தம், அரசுகளின் ஒப்புதலுக்கென வெளியிடப்பட்டபோது, அதில் கையெழுத்திட்ட முதல் நாடுகளில் ஒன்று, வத்திக்கான்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை, சனவரி 22, இவ்வெள்ளியன்று, நடைமுறைக்குக் கொணர்வதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 20, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், விண்ணப்பம் ஒன்றை விடுத்தார்.

அணு ஆயுதங்கள், மிகக் குறுகிய கால அளவில், மிகப்பெரும் அளவு மனித உயிர்களை அழிக்கும் வலிமை பெற்றுள்ளது என்றும், இதன் பயன்பாட்டால், மிக நீண்ட காலம் சுற்றுச்சூழல் சீரழிவும் உருவாகின்றது என்றும், திருத்தந்தை தன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டார்.

உலகெங்கும் அமைதியையும், நீதியையும் நிலைநிறுத்தி, மனித மாண்பைக் காப்பதற்கு, அனைத்து அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்வது ஒன்றே, அணு ஆயுதங்கள் அற்ற ஓர் உலகை உருவாக்க உறுதியான வழி என்பதையும், திருத்தந்தை, இப்புதனன்று நினைவுறுத்தினார்.

2017ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ஐ.நா. நிறுவனத்தின் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட, அணு ஆயுத தடை ஒப்பந்தம், அரசுகளின் ஒப்புதலுக்கென வெளியிடப்பட்டபோது, அதில் கையெழுத்திட்ட முதல் நாடுகளில் ஒன்று, வத்திக்கான் என்பதும், அவ்வரசின் பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், 2017ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

அணு ஆயுத தடை ஒப்பந்தம், நாடுகளின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக, 50 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, அக்டோபரில், ஹொண்டூராஸ் நாடு, இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய 50வது நாடு என்ற காரணத்தைத் தொடர்ந்து, இதனை, ஐ.நா. பொது அவை, சனவரி 22ம் தேதி நடைமுறைக்குக் கொணரவுள்ளது.

உலகில், வேதியியல், மட்டும் உயிரியல் ஆயுதங்கள் வைத்திருப்பது, சட்டத்திற்குப் புறம்பானது என்ற விதி நடைமுறையில் இருப்பதுபோல், சனவரி 22ம் தேதிக்குப் பின், அணு ஆயுதங்களை, உருவாக்குவது, வைத்திருப்பது, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக எச்சரிக்கை விடுப்பது ஆகியவை, சட்டத்திற்குப் புறம்பான நடைவடிக்கைகளாகின்றன.

இத்தருணத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ சபைகளின் உலகப் பேரவை, மற்றும், அமைதிக்காக சமயங்கள் என்ற அமைப்பு ஆகியவை, அணு ஆயத்தங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இணையுமாறு, உலகின் அனைத்து நாடுகளுக்கும், அண்மைய நாள்களில் அழைப்பு விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

20 January 2021, 14:58