தேடுதல்

Vatican News
மத்திய ஆப்ரிக்க குடியரசில் அமைதிக்காக வேண்டும் திருத்தந்தை மத்திய ஆப்ரிக்க குடியரசில் அமைதிக்காக வேண்டும் திருத்தந்தை  (Vatican Media)

மத்திய ஆப்ரிக்க குடியரசில் அமைதிக்காக வேண்டும் திருத்தந்தை

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களைத் தொடர்ந்து, அங்கு நிலவிவரும் பதட்ட நிலைகளைக் களைந்து, மக்கள் விரும்பும் அமைதியை வழங்க, அரசு அதிகாரிகள் முயலவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் அமைதி நிலவும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 6, இப்புதனன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் விண்ணப்பம் ஒன்றை விடுத்தார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களைத் தொடர்ந்து, அங்கு நிலவிவரும் பதட்ட நிலைகளை தான் கவலையோடு பின்பற்றி வருவதாகக் கூறியத் திருத்தந்தை, அங்குள்ள மக்கள் விரும்பும் அமைதியை அவர்களுக்கு வழங்க, அரசு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டிசம்பர் 27ம் தேதி அந்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து, அங்கு நிலவி வரும் அமைதியற்ற சூழலை வளர்க்கும் வண்ணம் நடைபெற்றுவரும் வன்முறை முயற்சிகளைக் கைவிட்டு, அனைத்து தரப்பினரும் உரையாடல் வழியே அமைதியைக் கொணர்வதற்கு தான் இறைவேண்டல் செய்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தற்போது அரசுத்தலைவராக இருக்கும் Faustin-Archange Touadéra அவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுளார் என்று அறிவிக்கப்பட்டதை ஏற்காத எதிர்கட்சித் தலைவர்கள், தேர்தல் முறைகேடுகளை வெளியிட்டு, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில், வைரம், மற்றும், யுரேனியம், ஆகிய கனிம வளங்கள் நிறைந்திருந்தாலும், அந்நாடு, ஆப்ரிக்க நாடுகளில் மிகவும் வறுமைப்பட்ட ஒரு நாடாக உள்ளது என்றும், அங்குள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளிலிருந்து வரும் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்துள்ளனர் என்றும் ஐ.நா.வின் அறிக்கையொன்று கூறுகிறது.

07 January 2021, 15:14